பயங்கர கொலை குற்றவாளிகள்.. "தீரன்" பட பாணியில் மாறுவேடத்தில் களமிறங்கிய போலீஸார் - அலறிய மும்பை
போலீஸார் தேடி வருகிறார்கள் என முன்கூட்டியே ரவுடிகளுக்கு தகவல் கிடைத்துவிடுவதால் அவர்கள் போலீஸார் கண்ணில் மண்ணை தூவி தப்பித்தனர்.
மும்பை: தலைமறைவான பயங்கர கொலை குற்றவாளிகளை பிடிக்க மும்பையில் போலீஸார் பல்வேறு மாறுவேடங்களில் சுற்றித்திரிந்தது தெரியவந்துள்ளது.
மிகவும் ஆபத்தான ரவுடிகள், கொலையாளிகளை பிடிக்க வேண்டும் என்பதால் ரகசியமாக இந்த ஆபரேஷனை போலீஸார் செய்துள்ளனர்.
மும்பை போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு கை மேல் பலன் கிடைத்ததை அடுத்து அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பரோல் கொடுத்த கொரோனா
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் கடுமையாக அதிகரித்தது. பொது இடங்களில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. ஆனால், சிறைச்சாலைகளில் இதுபோன்ற விதிமுறைகள் கடைப்பிடிக்க முடியாது என்பதால் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் ஏராளமான கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பல சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு உடனுக்குடன் பரோல், ஜாமீன் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டனர்.

தலைமறைவான ரவுடிகள்
இதனிடையே, மும்பை மத்திய சிறையில் இருந்து அவ்வாறு 500-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் வெளியேறினர். ஆனால், பரோல், ஜாமீன் காலங்கள் முடிவடைந்த பிறகும் பலர் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாகினர். இவர்களில் சாதாரண குற்றக் கைதிகள் பலரை போலீஸார் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர். ஆனால், கொலை குற்றங்களில் தொடர்புடையவர்கள், பயங்கர ரவுடிகள் ஆகியோரை போலீஸாரால் பிடிக்க முடியவில்லை. போலீஸார் தேடி வருகிறார்கள் என முன்கூட்டியே ரவுடிகளுக்கு தகவல் கிடைத்துவிடுவதால் அவர்கள் போலீஸார் கண்ணில் மண்ணை தூவி தப்பித்தனர். அவர்களுக்கு போலீஸார் சிலரே தகவல் கொடுப்பதும் தெரியவந்தது.

கொரியர் பாய்..
இதையடுத்து, தலைமறைவான ரவுடிகளை பிடிக்க ரகசிய ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 93 காவல் நிலையங்களில் சிறப்பாக செயல்படும் போலீஸார் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மாறுவேடங்கள் போடப்பட்டன. கொரியர் பாய், உணவு டெலிவரி செய்பவர்கள், தள்ளுவண்டியில் காய்கறி விற்பவர்கள், பால் போடுபவர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு நபர்களாக போலீஸார் மாறினர். யாருக்கும் துளியும் சந்தேகம் ஏற்பட்டுவிடாத வகையில் அந்தந்த தொழில்கள் செய்பவர்கள் மாதிரியே அவர்களுக்கு மாறுவேடம் போடப்பட்டது.

தூக்கிய போலீஸார்
இதனைத் தொடர்ந்து, யார் யாருக்கு எந்தெந்த ரவுடிகளை பிடிக்க வேண்டுமோ அந்த அசைன்மென்ட் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதன்படி, சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மாறுவேடங்களில் சுற்றித்திரிந்த போலீஸார், தலைமறைவு ரவுடிகள், கொலையாளிகளை அடையாளம் கண்டு மற்ற போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இவ்வாறு 193 தேடப்படும் குற்றவாளிகள், 93 தலைமறைவு குற்றவாளிகளை மும்பை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்தனர். இந்த தேடுதல் வேட்டை இன்னும் தொடர்ந்து வருவதாக மும்பை போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications