குடும்பத்திற்கு தெரியாமல் "இன்ப சுற்றுலா.." பாஸ்போர்ட்டை கிழித்த நபர்! இப்போ கம்பி எண்ணுகிறார்
மும்பை: பாங்காக் நகருக்கு இன்பச் சுற்றுலா சென்றது குடும்பத்தினருக்குத் தெரியக்கூடாது என்று பலே ஐடியா போட்ட ஒருவர் பாஸ்போர்ட்டை கிழித்திருக்கிறார். ஆனால், இதே குற்றச்சாட்டிற்காக அவர் இப்போது கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு என்ன நடந்தது..! அவர் செய்தது என்ன தவறு என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் இப்போது வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதுவும் ஹனிமூன், பிஸ்னஸ் டிரிப்களுக்கு மட்டும் வெளிநாடு செல்வது மாறி, விடுமுறைக் காலத்தைச் செலவிடவும் கூட வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதேநேரம் சிலர் குடும்பத்தினருக்குத் தெரியாமல் கூட "ரிலாக்ஸ்" செய்யவும் வெளிநாடு செல்கிறார்கள்.

திடீர் கைது
இதற்கிடையே புனேவை சேர்ந்த 51 வயது மதிக்கத்தக்க ஒருவர் இதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தில் அவரது பாஸ்போர்ட்டை குடியேற்ற அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பாஸ்போர்ட்டில் சந்தேகம் இருந்ததால் அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரது பாங்காக் பயணத்தைத் தனது குடும்பத்தினரிடமிருந்து மறைக்கத் தனது பாஸ்போர்ட்டின் பக்கங்களைக் கிழித்த குற்றச்சாட்டில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர் பலேராவ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மாயமான பாஸ்போர்ட் பக்கங்கள்
கடந்த திங்கள்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகளால் அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்துள்ளனர். அப்போது அவரது பாஸ்போர்ட்டில் சில பக்கங்கள் கிழிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 17/18 மற்றும் 21-26 ஆகிய பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தது.
அதாவது பலேராவ் கடந்த ஆண்டு நான்கு முறை பாங்காக்கிற்கு இன்பச் சுற்றுலா சென்று வந்திருக்கிறார். இந்த மாதத் தொடக்கத்தில், அவர் மும்பை விமான நிலையத்திலிருந்து இந்தோனேசியாவுக்கும் போய் வந்திருக்கிறார். அந்த குறிப்பிட்ட பயணங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பாஸ்போர்ட் பக்கங்கள் கிழிக்கப்பட்டது.
என்ன நடந்தது
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தனது பாஸ்போர்ட்டை கிழித்ததை ஒப்புக் கொண்டார். தனது பாங்காக் சுற்றுலாவைக் குடும்பத்தினரிடமிருந்து மறைக்கவே தனது பாஸ்போர்ட்டின் பக்கங்களைக் கிழித்ததாக அவர் குறிப்பிட்டார். இதையடுத்து சஹார் காவல் நிலையத்திற்கு பலேராவ் அழைத்துச் செல்லப்பட்டார். பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் அடுத்தகட்ட விசாரணை நடந்து வருகிறது.
குடும்பத்தினரிடம் இருந்து இன்ப சுற்றுலா சென்றதை மறைக்க பாஸ்போர்ட் பக்கங்களைக் கிழிந்த பலேராவ் இப்போது சட்டப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார். அதேநேரம் இதுபோன்ற பாஸ்போர்ட் பக்கங்களைக் கிழித்த குற்றச்சாட்டில் ஒருவர் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாவது இது முதல்முறை இல்லை. இதேபோல மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து சுற்றுலாவை மறைக்க பாஸ்போர்ட் பக்கங்களைக் கிழிந்ததாக ஏற்கனவே சிலர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டம் சொல்வது என்ன
நமது நாட்டில் வேண்டுமென்றே பாஸ்போர்ட்டை சேதப்படுத்துவது பாஸ்போர்ட் சட்டம், 1967 இன் கீழ் ஒரு குற்றமாகும். அதேநேரம் பாஸ்போர்ட் எதிர்பாராத விதமாகச் சேதமடைந்துவிட்டால் புதிய பாஸ்போர்ட் கோரி போஸ்போர்ட் இணையதளத்திலோ அல்லது பாஸ்போர்ட் சேவா கேந்திராவிலோ நாம் விண்ணப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications