புனே சொகுசு கார் வழக்கில் திருப்பம்.. சிறுவனின் தந்தை மற்றும் தாத்தாவிற்கு ஜாமீன் தந்த நீதிமன்றம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மது போதையில் சொகுசு கார் ஓட்டி 2 பேர் உயிரிழந்த வழக்கில் 17 வயது இளைஞரின் தந்தை மற்றும் தாத்தாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.இருவரும் விபத்தின் போது 17 வயது நபர் காரை ஓட்டவில்லை என்று ஆதாரங்களை கலைக்க முயற்சித்ததாக கைதாகி இருந்தனர்.
புனேவின் கல்யாணி நகர் பகுதியில் கடந்த மே மாதம் 19-ம் தேதி அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் சீர்திருத்த முகாமில் அடைக்கப்பட்டார்.

மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கிய 17 வயது சிறுவன் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீதுமோதினார். இதில் ஐடி ஊழியர்களான அனீஷ் அவாதியா (24), அஸ்வினி கோஸ்டா (24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய சிறுவனை பொதுமக்கள் அப்போது மடக்கி பிடித்து, காவலர்கள் வசம் ஒப்படைத்தனர். ஆனால் அடுத்த 15 மணி நேரத்தில் அவருக்கு சிறார் நீதி வாரியம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. மக்களும், எதிர்க்கட்சியினரும் இது குறித்து விமர்சித்தனர். அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
இந்த சூழலில் சிறுவனின் ஜாமீன் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. சிறுவனமும் சிறார்கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். இதேநேரம் விபத்தின் போது 17 வயது நபர் காரை ஓட்டவில்லை என்று ஆதாரங்களை கலைக்க முயற்சித்ததாக சிறுவனின் தந்தையும், தாத்தாவும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டார்கள். சிறுவனுக்கு கார் வழங்கிய குற்றத்திற்காக கட்டுமான தொழிலதிபரும் சிறுவனின் தந்தையுமான விஷால் அகர்வால் கைது செய்யப்பட்டார். இதேபோல் சிறுவனுக்கு பதிலாக குடும்ப டிரைவரை சிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சிறுவனின் தாத்தாவையும் போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல் சிறுவனுக்கு மதுபானம் பரிமாறிய மதுபானக் கூட ஊழியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். அடுத்ததாக இந்த விவகாரத்தில் புனே சசூன் மருத்துவமனையின் மருத்துவர் அஜய் தவாரே, மருத்துவர் ஸ்ரீஹரி ஹர்னோர் ஆகியோர் அதிரடியாககைது செய்யப்பட்டார்கள். மருத்துவர்கள் இருவரும் சிறுவனின் ரத்தப் பரிசோதனை அறிக்கையை திரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ரத்தப் பரிசோதனை அறிக்கையை மாற்றுவது தொடர்பாக சிறுவனின் தாயாரும் கைது செய்யப்பட்டார். 17 வயது சிறுவனை காப்பாற்றுவதற்காக ஒரு பிரபல தொழில் அதிபரின் குடும்பமே சிறைக்கு போனது. மருத்துவர்கள், மதுபான கடை ஊழியர்கள், கடை நிலை ஊழியர்கள் வரை பலரும் சிறை சென்றனர்.
புனே மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சொகுசு கார் விபத்து வழக்கில், 17 வயது சிறுவனை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்து வைக்கும் உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் 25ம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனை சிறுவர் நீதி வாரியத்தின் (JJB) காவலில் வைக்க வேண்டும் என்ற உத்தரவு சட்டவிரோதமானது என்று மும்பை நீதிமனறம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் 17 வயது சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் மற்றும் அவரது தாத்தாவிற்கு இன்று புனே நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications