ராகுல் காந்தியின் 'இடஒதுக்கீடு' பிரசாரம் வேஸ்ட்.. 53 தனித் தொகுதிகளில் 42-ஐ கைப்பற்றிய பாஜக கூட்டணி!
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் தலித், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 'இடஒதுக்கீட்டை' பாஜக கூட்டணி ஒழித்துக் கட்டிவிடும் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த பிரசாரம் கை கொடுக்கவில்லை. மகாராஷ்டிராவின் மொத்தம் 53 தனித் தொகுதிகளில் 42 இடங்களை பாஜகவின் மகாயுதி கூட்டணியே கைப்பற்றியதால் ராகுல் காந்தியின் பிரசாரம் தோல்வியடைந்துவிட்டது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி சரித்திரம் படைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. மகாராஷ்டிரா சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியே இல்லாத பரிதாப நிலைமை உருவாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் அபார வெற்றியைப் பெற்ற பாஜக கூட்டணி இப்போது முதல்வர் பதவிக்காக முட்டி மோதுகிறது. அதிகமான இடங்களைப் பெற்ற பாஜக முதல்வர் பதவியை கோருகிறது. ஆனால் பீகாரில் குறைவான இடத்தைப் பெற்ற நிதிஷ்குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுத் தந்தது போல எங்களுக்கு இந்த முறையும் முதல்வர் பதவியை விட்டுத் தர வேண்டும் என்கிறது ஷிண்டே சிவசேனா. ஆனால் அஜித்பவார் தேசியவாத காங்கிரஸோ, பாஜகவுக்குதான் முதல்வர் பதவி என ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனிடையே மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மகாராஷ்டிராவில் தலித்துகளுக்கான தனித் தொகுதிகள் 29; பழங்குடியினருக்கான தனித் தொகுதிகள் 24. தலித்துகளுக்கான 29 தனித் தொகுதிகளில் பாஜக கூட்டணி 21 இடங்களைக் கைப்பற்றியது. பழங்குடிகளுக்கான 24 தனித் தொகுதிகளிலும் 21 இடங்களை பாஜக கூட்டணியே கைப்பற்றியது. அதாவது மொத்தம் 53 தனித் தொகுதிகளில் 42ஐ பாஜக கூட்டணியே கைப்பற்றி இருக்கிறது.
இது குறித்து மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகையில், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ராகுல் காந்தி, இடஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுத்து பேசியிருந்தார். பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தலித், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டிவிடும்; அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கவே போராடுகிறோம் என கூறியிருந்தார். ஆனால் இந்த பிரசாரம் தலித்- பழங்குடி மக்களிடையே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவே இல்லை என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன என்கின்றனர்.












Click it and Unblock the Notifications