"முட்டாள்".. சாவர்க்கரை பற்றி பேச என்ன தகுதி உள்ளது? ராகுல் காந்தியை மோசமாக விமர்சித்த ராஜ் தாக்கரே
மும்பை: "முட்டாளே.. சாவர்க்கரை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது?" என்று ராகுல் காந்தியை குறிப்பிட்டு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், பிரிட்டிஷாரிடம் சாவர்க்கர் மேற்கொண்ட அணுகுமுறை கோழைத்தனமானது அல்ல என்றும், அது மிகப்பெரிய ராஜதந்திரம் எனவும் அவர் கூறியுள்ளார்.
சாவர்க்கரை விமர்சித்து பேசியதற்காக மகாராஷ்டிராவில் உள்ள அரசியல் கட்சிகள் ராகுல் காந்தியை கடுமையாக சாடி வரும் நிலையில், ராஜ் தாக்கரே இப்படி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சாவர்க்கர் மீது கடும் விமர்சனம்
நாடு முழுவதும் பாரத் ஜோடா யாத்திரையை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அண்மையில் மகாராஷ்டிராவுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் நிறுவனர்களில் ஒருவரான சாவர்க்கரை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசுகையில், "இந்தியாவில் ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவர் தான் இந்த சாவர்க்கர். அதுமட்டுமல்லாமல், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு விசுவாசமாக நடந்ததற்காக அவர்களிடம் இருந்தே ஓய்வூதியத்தையும் சாவர்க்கர் பெற்று வந்தார்" என பேசினார். மேலும், சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் எழுதியதாக ஒரு கடிதத்தையும் ராகுல் வாசித்து காண்பித்தார். அதில், "ஐயா, நான் உங்களின் வேலைக்காரனாக தொடர்ந்து இருக்க விரும்புகிறேன்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆக்ரோஷமான ராஜ் தாக்கரே
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜகவும், இந்து அமைப்புகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா (ஷிண்டே அணி), உத்தவ் அணி சிவசேனா, நவநிர்மான் சேனா ஆகிய கட்சிகளும் ராகுல் காந்தியின் இந்த பேச்சை கண்டித்துள்ளன. அந்த வகையில், மும்பையில் நேற்று நடைபெற்ற நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே பேசுகையில், "முட்டாளே.. சாவர்க்கரை பற்றி பேச உனக்கு (ராகுல் காந்தி) என்ன தகுதி இருக்கிறது?

அது ராஜதந்திரம் தெரியுமா?
அவர் சிறையில் எத்தனை வருடங்களாக இருந்தார்.. எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தார் என்று உனக்கு தெரியுமா? அவர் கடந்து வந்த பாதை சாதாரணமானது அல்ல. சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டார் என காங்கிரஸும். சில கட்சிகளும் எள்ளி நகையாடுகின்றன. சாவர்க்கர் அப்படி செய்தது கோழைத்தனம் அல்ல. மாறாக, அது மிகப்பெரிய ராஜதந்திரம். பகவான் கிருஷ்ணனின் நீதி போதனைகளில் கூட எதிரிகளை ராஜதந்திரத்தை கொண்டு வீழ்த்துவது குறித்து எழுதியிருக்கிறது. அதைதான் சாவர்க்கரும் செய்திருக்கிறார்.

"தலைவர்களை சீண்ட வேண்டாம்"
இந்த நேரத்தில் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நேரு, இந்திரா காந்தி போன்ற தலைசிறந்த தலைவர்களை விமர்சிப்பதை பாஜக விட்டுவிட வேண்டும். அதேபோல, சாவர்க்கர் உள்ளிட்டோரை காங்கிரஸ் சீண்ட வேண்டாம். நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய பெரும் தலைவர்களுக்கு சில கறுப்பு பக்கங்களும் இருக்கும். அதை யாரும் பெரிதுப்படுத்த வேண்டாம். நாட்டில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் போன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றில் கவனம் செலுத்துங்கள்" என ராஜ் தாக்கரே கூறினார்.












Click it and Unblock the Notifications