பெருமைமிகு ராஜபுத்திரன்.. ஆஸி. டெஸ்ட் கிரிக்கெட் கமெண்ட்ரியில் ஜடேஜாவின் “ஜாதியை” சொன்ன ரவி சாஸ்திரி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜாவை சாதி பெயர் சொல்லி ரவி சாஸ்திரி வாழ்த்தியுள்ளார்.
மும்பை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்கில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ரவீந்திர ஜடேஜாவை சாதி பெயர் சொல்லி வர்ணனையாளார் ரவி சாஸ்திரி வாழ்த்தியது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட புகழ்பெற்ற பார்டர் கவாஸ்கர் தொடர், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது.
இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்கியது.

பார்டர் கவாஸ்கர் கோப்பை
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஷ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை போன்று இந்த தொடரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு தொடரில் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த தொடரில் இந்தியா வென்றால் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும்.

இந்திய அணி
இந்த நிலையில் நாக்பூரில் தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, புஜாரா, ஜடேஜா, அஸ்வின், முஹம்மது ஷமி, கே.எல்.ராகுல், அக்சர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், முஹம்மது சிராஜ், ஸ்ரீகர் பரத் ஆகியோர் இடம்பெற்றனர்.

தடுமாறிய ஆஸ்திரேலியா
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ். ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரராக உஸ்மான் கவாஜாவை ஒரு ரன் எடுத்த நிலையில் வீழ்த்தினார். அடுத்த ஓவரிலேயே ஆஸ்திரேலியாவின் மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர் முஹம்மது ஷமியின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி ஆரம்பமே ஆட்டம் கண்டது.

ஆஸ்திரேலியா ஆல் அவுட்
அடுத்து லபுஷேனுடன் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் நிதானமான ஆடி ரன்களை சேர்த்த நிலையில், இருவரையும் வீழ்த்தினார் ரவீந்திர ஜடேஜா. அடுத்து ரென்ஷா, ஹேண்ட்ஸ்கூம்ப், மர்பி ஆகியவர்களும் ஜடேஜாவின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். மறுபக்கம் தமிழ்நாடு வீரர் அஸ்வினின் பந்து வீச்சில் அலெக்ஸ் கேரே, பேட் கம்மின்ஸ், போலேண்ட் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

ரோகித் ஷர்மா அதிரடி
இறுதியாக 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது ஆஸ்திரேலிய அணி. இதனை அடுத்து விளையாட தொடங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, இது டெஸ்ட் போட்டிதானா என்று சந்தேகிக்கும் அளவுக்கு பவுண்டரி, சிக்சர் என விளாசி 69 பந்துகளில் 56 ரன்களை குவித்தார்.

ஜடேஜா அசத்தல்
மறுமுனையில் நின்ற கே.எல்.ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்த நிலையில் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது. இதில் பலரையும் வியக்க வைத்த ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சுதான். காயம் காரணமாக பல மாதங்களாக இந்திய அணியில் விளையாடாமல் இருந்த ஜடேஜா, நீண்ட ஓய்வுக்கு பிறகு முக்கியமான இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுகிறார்.

ரவி சாஸ்திரி பாராட்டு
இதன் முதல் இன்னிங்சிலேயே அவர் 5 விக்கெட் வீழ்த்தியதை பலரும் பாராட்டி வருகிறார்கள். ரவீந்திர ஜடேஜாவின் மாயாஜால சுழற்பந்து வீச்சை கண்டு கமெண்ட்ரி பாக்ஸில் இருந்த வர்ணனையாளர்கள் வெகுவாக பாராட்டினர். அப்போது வர்ணனையாளரும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, ஜடேஜாவின் சாதியை குறிப்பிட்டு பெருமைக்குரிய ராஜபுத்திரன் (PROUD RAJPUT) என்று பேசி உள்ளார்.

சாதி பெயர் சொல்லி பாராட்டுவதா?
விளையாட்டு என்பது சாதி, மத பாகுபாடுகளை கடந்து ஒற்றுமையை ஏற்படுத்தும் என்று பலர் நம்புகின்றனர். ஆனாலும், அதை வைத்தும் சாதி, மத அடிப்படையில் பிரிவுகளை ஏற்படுத்த சிலர் முயன்று வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளரும், புகழ்பெற்ற வர்ணணையாளருமான ரவி சாஸ்திரியும் சாதி பெயர் சொல்லி வாழ்த்துவது முறையா? என்று பலர் விமர்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications