உத்தவ் தாக்கரே பண்ணை வீடு... அத்துமீறியதாக.. ரிபப்ளிக் டிவி செய்தியாளர்கள் கைது!!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் ராய்கரில் இருக்கும் அந்த மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் பண்ணை வீட்டுக்குள் போலீசாரிடம் துஷ்பிரயோகம் செய்து அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்ததாக ரிபப்ளிக் செய்தியாளர் மற்றும் புகைப்படக்காரர் இருவர் கடந்த செவ்வாய் கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராய்கரில் காலாபூர் அருகே இருக்கும் மொஹே பில்வாலே கிராமத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு சொந்தமான பண்ணை வீடு இருக்கிறது. இங்கு கடந்த செவ்வாய் கிழமை இரவு வந்த இருவர் பண்ணை வீட்டுக்குள் அத்துமீற முயற்சித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரும் ராய்க்காட் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதுகுறித்து ராய்காட் போலீஸ் நிலைய செய்தி தொடர்பாளர் சுரேஷ் யாம்கர் கூறுகையில், ''அவர்கள் இருவரும் செய்தியாளர்களா என்பது தெரியாது. முதல்வரின் பண்ணை வீட்டின் பாதுகாவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்வரின் பண்ணை வீடு எங்கு இருக்கிறது என்று காவலர்களை அணுகி ஊடகவியலாளர்கள் கேட்டுள்ளனர். தனக்குத் தெரியாது என்று காவலர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் பண்ணை இல்லத்தின் காவலாளி என்பதைக் கண்டறிந்த பின்னர், ஊடகவியலாளர்கள் அவரை அணுகி தவறான தகவல்களை வழங்கியதற்காக அவருடன் வாதிட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் அவர்கள் வெளியேறியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்'' என்றார்.
இதையடுத்து ரிபப்ளிக் டிவியின் அனுஜ் சர்மா, யாஷ்பால்ஜித் இருவரும் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். ரிபப்ளிக் டிவியை மூடுவதற்கு மகாராஷ்டிரா அரசு திட்டமிடுவதாக ரிபப்ளிக் டிவி குற்றம்சாட்டியுள்ளது. போலீஸ் காவலுக்கு செல்வதற்கு முன்பு சட்ட ஆலோசனையை பெறுவதற்கும் மறுக்கப்பட்டு இருப்பதாக ரிபப்ளிக் டிவி தெரிவித்துள்ளது. இதை சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் டிவி நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications