இப்படி ஒரு வீடா? "ஹோம் டூர்" வீடியோ பார்த்து அசந்த ஆனந்த் மகிந்திரா.. கடைசியாக சொன்னதுதான் ஹைலைட்
மும்பை: பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். விமானத்தையே வீடாக மாற்றிய நபர் ஒருவர் வீட்டில் உள்ள வசதிகளை சொல்லும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. அந்த வீட்டை பார்த்து ஆனந்த் மகிந்திரா வியப்புடன் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
நாடறிந்த தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா. கார் உற்பத்தி, வங்கி, ஐடி என பல்வேறு துறைகளில் உச்சம் தொட்டுள்ள நிறுவனமான மகிந்திரா குழுமத்தின் தலைவராக இருக்கும் ஆனந்த மகிந்திரா சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இயங்க கூடியவர். ஆனந்த மகிந்திராவுக்கு எக்ஸ் தளத்தில் 11 லட்சம் பாலோயர்கள் இருக்கிறார்கள்.

தனக்கு பிடித்தமான விஷயங்கள், தான் கண்டு வியந்த விஷயங்கள் உள்ளிட்ட பலவற்றையும் ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார். ஆனந்த் மகிந்திராவின் இத்தகைய ட்வீட்கள் இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆகும். அந்த வகையில், ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். இந்த வீடியோவும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகு வருகிறது.
வீடியோவில், விமானம் ஒன்று சொகுசு இல்லமாக மாற்றப்பட்டு இருப்பதையும் அந்த வீட்டில் உள்ள வசதிகளையும் காட்டும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன. ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபர் பெலிக்ஸ் டெமின் என்பவர்தான் பயன்பாட்டில் இல்லாத போயிங் 737 விமானத்தை வாங்கி, அதை சொகுசு வீடாக மாற்றியிருக்கிறார். அந்த விமான வீட்டில் என்னவெல்லாம் இருக்கிறது என்பது பற்றிய ஹோம் டூர் வீடியோவும் பெலிக்ஸ் டெமின் வெளியிட்டுள்ளார்.
விமானத்திற்குள்ளேயே சொகுசு படுக்கைகள், நீச்சல் குளங்கள் என தனி வில்லா வீட்டில் காணப்படும் அத்தனை வசதிகளும் அதில் உள்ளன. இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள நியாங் நியாங் பாறைகளின் மேல் இந்த விமான வீடு அமைந்துள்ளது. விமானத்தில் இருந்து வெளியே பார்த்தால் இந்திய பெருங்கடலை பார்க்கும் விதமாக ரம்மியான சூழலுக்கு நடுவே இந்த வீடு அமைந்துள்ளது.
இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் இந்த விமான வீட்டை பகிர்ந்துள்ள ஆனந்த மகிந்திரா அதில் பதிவிட்ட கருத்துதான் தற்போது நெட்டிசன்களை கவரும் விதமாக உள்ளது. ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- தங்களின் கனவுகளை நிஜமாக்கும் அதிர்ஷ்டம் சிலருக்கு இருக்கும். இந்த நபரை பார்த்தால் தனது கற்பனைகளுக்கு எந்த தடையும் விதிப்பவர் போல தெரியவில்லை.
இந்த விமான வீட்டில் புக்கிங் செய்து தங்கும் ஆர்வம் எனக்கு உள்ளதா என கண்டுபிடிக்க முயற்சித்து கொண்டு இருக்கிறேன். ஆனால், இந்த அனுபவத்திற்கு பிறகு விமானம் மீதான சலிப்பு வந்து விடுமோ என்ற சிறிய கவலையும் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். விமானத்தை வீடாக மாற்றிய நபரின் கற்பனைத்திறனை பார்க்கும் போது வியப்பாக உள்ளது என சில நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications