Saif Ali Khan: சைஃப் அலி கான் வீட்டில் சிசிடிவி+ செக்யூரிட்டியை தாண்டி கொள்ளையன் நுழைந்தது எப்படி?
மும்பை: இன்று அதிகாலை மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள சைஃப் அலி கானின் வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதைப் பார்த்த சைஃப் அலி கான், கொள்ளையனைத் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அப்போது நடந்த தாக்குதலில் படுகாயமடைந்த சைஃப் அலி கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இந்த கொள்ளை எப்படி நடந்தது என்பது குறித்து சில பரபர தகவல்கள் வெளியாகியுள்ளது.
சைஃப் அலி கான் இன்று அதிகாலை 3.30 மணியளவில் அங்குள்ள லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவரது உடலில் ஏகப்பட்ட கத்திக்குத்து காயங்கள் இருந்தது.

என்ன நடந்தது:
அவரது வீட்டில் கொள்ளையடிக்க ஒருவன் முயன்ற நிலையில், அதை சைஃப் அலி கான் தடுக்க முயன்ற போதே இந்த கத்திக்குத்து நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. சைஃப் அலி கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழலில், அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே சைஃப் அலி கான் வீட்டில் இந்த கொள்ளை முயற்சி எப்படி நடந்தது என்பது குறித்து சில மேஜர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எப்படி நடந்தது:
சைஃப் அலி கானின் வீட்டில் பல சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும், போலீசார் அதை ஆய்வு செய்ததில் தாக்குதல் நடந்து இரண்டு மணி நேரத்திற்கு முன்பு வரை, சைஃப் அலி கானின் வீட்டு வளாகத்திற்குள் யாரும் நுழைவது பதிவாகவில்லை. அங்குக் காவலுக்கு இருந்த செக்யூரிட்டியும் கூட அதே கருத்தைத் தான் குறிப்பிடுகிறார். யாரும் உள்ளே சென்றதை தான் பார்க்கவில்லை என்றே செக்யூரிட்டி குறிப்பிடுகிறார்.

இதனால் அந்த கொள்ளையன் முன்கூட்டியே உள்ளே நுழைந்து, நள்ளிரவு வரை காத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சைஃப் அலி கானின் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த சூழலில் அதையும் தாண்டி அந்த நபர் எப்படி உள்ளே வந்தார் என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் துணை கமிஷனர், தீட்சித் கெடம் தெரிவித்துள்ளார்.
வேறு நாசவேலைக்கு திட்டம்?
இந்தச் சம்பவம் மும்பையின் பாந்த்ரா பகுதியில் நடந்துள்ளது. அது முழுக்க முழுக்க பிரபலங்கள் வசிக்கும் ஒரு பகுதியாகும். அப்படியிருக்கும் போது ஈஸியாக உள்ளே வந்தது எப்படி என்றும் அவருக்கு வேறு யாராவது உதவி செய்தனரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும், அந்த நபருக்கு திருடுவது மட்டும் தான் நோக்கமாக இருந்ததா.. இல்லை வேறு எதாவது நாச வேலையில் இறங்க அவர் திட்டமிட்டிருந்தாரா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
மருத்துவமனை வட்டாரம் சொல்வது என்ன?
சைஃப் அலி கான் மொத்தம் ஆறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு இருந்ததாகவும் அதில் இரண்டு இடங்களில் காயம் ஆழமாகவே இருந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக ஒரு காயம் முதுகுத்தண்டுக்கு மிக அருகே உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சைஃப் அலி கானுக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 10 இடங்களில் தையல் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல சைஃப் அலி கான் டீம் சார்பிலும் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரசிகர்கள் பொறுமையாக இருக்கும்படியும் அவரது உடல்நிலை குறித்த அறிவிப்புகளை மருத்துவமனை சார்பில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications