திருமணத்துக்கு பெண் இல்லையாம்.. மணமகன் உடையில் தெருதெருவாய் இளைஞர்கள் ஊர்வலம்.. பரபரத்த மகாராஷ்டிரா
மும்பை: மகாராஷ்டிராவில் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்கவில்லை எனக்கூறி மணமகன் அலங்காரத்தில் குதிரையில் தெருதெருவாக மேளதாளங்கள் முழங்க 90ஸ் கிட்ஸ் ஊர்வலம் சென்று கலெக்டரிடம் புகார் அளித்த சம்பவம் நடந்துள்ளது.
திருமணம்.. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதற்கான துவக்க நிகழ்ச்சி. மேலும் வாழ்நாளில்
திருமணம் என்பது ஒரு தரப்புக்கும் எளிமையானதாக இருக்கும் வேளையில் தான் மற்றொரு தரப்புக்கு கடினமான ஒன்றாக மாறி உள்ளது. அதாவது சிலருக்கு மணப்பெண், மணமகன் கிடைப்பதில் சிரமம் இருக்கும்.

டிரெண்டாகும் 90ஸ் கிட்ஸ்
இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம். வேலை, சம்பளம், அந்தஸ்து உள்ளிட்ட பல காரணங்களால் ஆண், பெண் என இருபாலருக்கும் சில சமயங்களில் திருமணம் என்பது கைக்கூடுவதில தாமதம் ஏற்படுகிறது. தற்போதைய சூழலில் திருமண பிரச்சனைகளை 21 வயது நிரம்பிய அனைவரும் சந்தித்து வந்தாலும் கூட 90ஸ் கிட்ஸ்கள் தான் பேசும் பொருளாக உள்ளன. இதுதொடர்பான மீம்ஸ்கள் கூட இணையதளத்தில் அவ்வப்போது டிரெண்டாவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

பெண் கேட்டு ஊர்வலம்
இந்நிலையில் தான் Brigdegroom Morcha எனும் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் நேற்று திருமணத்துக்கு பெண் கேட்டு மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூரில் தெருத்தெருவாக ஊர்வலம் சென்றனர். அதன்படி ஏராளமான இளைஞர்கள் மணமகன் போல் அலங்காரம் செய்து குதிரைகளில் அமர்ந்து மேளதாளம் முழங்க சோலாப்பூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். அங்கு அவர்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்.

மனுவில் இருந்தது என்ன?
அதில் சிந்திக்க வைக்கும் வகையில் அவர்கள் சில அம்சங்களை குறிப்பிட்டு இருந்தனர். அதன்படி ‛‛சோலாப்பூரில் ஆண்-பெண் விகிதாச்சாரத்துக்கு இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. பெண் குழந்தைகளின் எண்ணிக்கை என்பது குறைவாக உள்ளது. கருத்தரிப்பதற்கு முந்தைய மற்றும் பிரசவத்துக்கு பிந்தைய தொடர்பான பிரச்சனைகளை கண்டறிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியிருந்தனர். மேலும் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்ள பெண்கள் இல்லை. பெண்கள் தேடி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கேலி செய்தாலும் சிந்திக்க வேண்டும்
மகாராஷ்டிராவின் பாலின விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 889 பெண்களாக உள்ளது. இதுபற்றி அந்த அமைப்பினர் நிறுவனர் ரமேஷ் பராஸ்கர் கூறுகையில், ‛‛இந்த அமைப்பை மக்கள் கேலி செய்யலாம். ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால் மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. இதனால் ஆண், பெண் விகிதத்தில் பெரியளவில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. இது பற்றி அரசு சிந்திரக்க வேண்டும். இந்த பிரச்சனைக்கு அரசே முக்கிய காரணமாகும். இதனால் திருமண வயது இளைஞர்களுக்கு மணமகள் கிடைப்பது இல்லை. இது மாற வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications