ஏக்நாத் ஷின்டேவை கலாய்த்து ஸ்டாண்ட் அப் காமெடி.. ஹோட்டலை அடித்து நொறுக்கிய சிவசேனா கட்சியினர்
மும்பை: மும்பையில் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்து காமெடி நிகழ்ச்சி நடத்தியதால் கோபம் அடைந்த சிவசேனா கட்சியினர் காமெடியன் குணால் கம்ராவின் நிகழ்ச்சி நடைபெற்ற ஹோட்டலை சூறையாடினர். குணால் கம்ராவை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி போலீசில் புகாரளித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகிக்கிறது. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி வகித்து வரும் நிலையில் துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே உள்ளார்.

இந்த நிலையில்தான், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்து காமெடி ஷோவில் பேசிய பிரபல காமெடியனான குனால் கம்ராவை சிவசேனா கட்சியினர் தாக்கிய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
அடித்து உடைத்த சிவசேனாவினர்
மகாராஷ்டிராவில் மிகவும் பிரபலமான ஸ்டண்ட் அப் காமெடியனாக இருப்பவர் குனால் கம்ரா. அரசியல் நையாண்டி செய்து தனது காமெடி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பேசி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து இருக்கிறார். அந்த வகையில் மும்பை கார் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இவரது காமெடி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை அவர் துரோகி எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.
போலீசில் புகார்
இதனால், கொதிப்பு அடைந்த சிவசேனா கட்சியினர் நிகழ்ச்சி நடைபெற்ற ஸ்டூடியோ அமைந்துள்ள ஹோட்டலை சூறையாடியுள்ளனர். சிவசேனா கட்சியினர் நாற்காலிகள், மேசைகள் மற்றும் விளக்குகளை அடித்து நொறுக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. ஸ்டாண்ட் அப் காமெடியன் காம்ரா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி சிவசேனா கட்சியினர் காவல்துறையில் புகாரளித்துள்ளனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு உத்தவ் தாக்கரேவுக்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா கட்சியையும் கைப்பற்றினார். இதனை குறிப்பிடும் விதமாக அவரை மையப்படுத்தி காமெடி செய்த குணால் காம்ராவுக்கு எதிராக தற்போது சிவசேனா கட்சியினர் புகாரளித்துள்ளனர். அவரை கைது செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
ஆதித்ய தாக்கரே கேள்வி
உத்தவ் தாக்கரேவிடம் பணம் பெற்றுக்கொண்டு குணால் காம்ரா இப்படி, ஏக்நாத் ஷிண்டேவை குறிவைத்து பேசுவதாக சிவசேனா எம்பி நரேஷ் மஹாஸ்கே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், காம்ரா ஒரு ஒப்பந்த காமெடியன். அவர் பாம்பின் வாலை மிதித்து இருக்க கூடாது. பாம்பின் கோரைப்பல் வெளியே வந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும்.
அவரை நாடு முழுக்க சுதந்திரமாக நடமாட விடமாட்டோம். நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்" என்று கூறினார். இதற்கிடையே, சிவசேனா கட்சியினரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளதா என்றும் உத்தவ் சிவசேனா கட்சியை சேர்ந்த ஆதித்ய தாக்கரே கேள்வி எழுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications