மகாராஷ்டிரா அரசியல்.. திடீர் திருப்பம்.. ராஜ் தாக்கரேவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஏக்நாத் ஷிண்டே!
மும்பை: மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுடன் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே இருமுறை தொடர்புகொண்டு பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் இருந்து விலகி, பாஜக-வுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று திடீரென சிவசேனா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முக்கிய அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார். இவருக்கு ஆதரவாக சிவசேனாவைச் சேர்ந்த 40 எல்எல்ஏ-க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் அசாம் மாநிலத்தில் முகாமிட்டுள்ள நிலையில், ஆட்சியை தக்கவைக்க சிவசேனா கட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிவசேனா போராட்டம்
இதனிடையே முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியுள்ள அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏக்நாத் ஷிண்டே அணியில் உள்ள எம்எல்ஏ-க்களின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. இதனிடையே அதிருப்தி எம்எல்ஏ-க்களின் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சஞ்சய் ராவத் எச்சரிக்கை
இதனைத்தொடர்ந்து சிவசேனா கட்சி மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே அணியில் உள்ள எம்எல்ஏ-க்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், அசாமில் உள்ள அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 40 பேர் உயிருடன் இல்லை. அவர்களது உயிரற்ற உடல்களே மகாராஷ்டிரா திரும்பும். கவுகாத்தியில் இருந்து புறப்படும்போது, மனதளவில் அவர்கள் உயிருடன் இருக்கமாட்டார்கள். இங்கே எரிந்து கொண்டிருக்கின்ற நெருப்பால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அசாமில் இருந்து வந்து சேரும் ஆன்மாக்கள் இல்லாத உடல்கள் நேரடியாக பிரேத பரிசோதனைக்காக சட்டசபைக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

ராஜ் தாக்கரேவுடன் பேச்சுவார்த்தை
இந்நிலையில் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை தொடர்ந்து கொண்டு சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே தொலைபேசி மூலம் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதுகுறித்து மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தரப்பில், மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் சூழல் பற்றி ஆலோசித்ததாகவும், ராஜ் தாக்கரேவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

கட்சி நடவடிக்கை
இதனிடையே மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேருக்கு தகுதிநீக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தடைக்கோரி அவர்கள் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இதனிடையே ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேவின் உறவினரான ராஜ் தாக்கரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சம்பவம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications