சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு! இந்துக்களை பிளவுபடுத்துவதாக சாடல்
மும்பை: மகாராஷ்டிராவில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று, துணை முதலமைச்சர் அஜித் பவார் பேசியிருப்பது கூட்டணி கட்சியான பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலிலும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிதான், மீண்டும் பிரதமர் வேட்பாளராக பாஜகவால் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார். எனவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், நேருவுக்கு பின் தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்கும் தலைவர் என்கிற வரலாற்று பெருமையை மோடி பெறுவார்.

மட்டுமல்லாது, 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸின் நூற்றாண்டு வருகிறது. இதனை சிறப்பாக கொண்டாட பாஜக ஆட்சியில் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே இந்த தேர்தலை பாஜக மிகவும் கவனமாக அணுகி வருகிறது. ஆனால் பாஜகவின் திட்டங்களுக்கும், முயற்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி, 'ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு' மூலம் வெடி வைத்திருக்கிறது.
இந்தியாவை பொறுத்த அளவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 1872ம் ஆண்டு தொடங்கியது. இந்த கணக்கெடுப்பில் சாதி வாரியாகவும் மக்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது. அப்போது முதல் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியாக 1941ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அப்போது இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் அந்த கணக்கெடுப்பு வெளியிடப்படவில்லை. எனவே 1931ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பே இறுதியானதாகும்.
அதன் பின்னர் நாடு சுதந்திரமடைந்த நிலையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. கடந்த 2010ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சமூக, பொருளாதார சாதிக் கணக்கெடுப்பை நடத்தியது. ஆனால் 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக, இந்த கணக்கெடுப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதாக கூறி இதன் விவரங்களை வெளியிடவில்லை. எனவே, 1931ம் ஆண்டு நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்கள் எவ்வளவு பேர் இருந்தார்களோ, அதன் அடிப்படையில்தான் தற்போது வரை இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
1931க்கும் 2023க்கும் ஏறத்தாழ நூற்றாண்டு இடைவெளி இருப்பதால், இந்த காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகை அதிகரித்திருக்கும். எனவே கூடுதல் இடஒதுக்கீடு வழங்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதில் டிவிஸ்ட் என்னவெனில் பாஜக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளும் கூட இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளன. அப்படித்தான் மகாராஷ்டிராவின் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அஜித் பவார் இந்த கோரிக்கையை தீவிரமாக எழுப்பியுள்ளார்.
இதற்கு ஆர்எஸ்எஸ் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஸ்ரீதர் காட்கே இது குறித்து கூறுகையில், "சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு ஜாதிகள்தான் காரணம். குறிப்பிட்ட காலத்திற்குள் சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி, அம்பேத்கர் உள்ளிட்டோர் கூறியுள்ளனர். அதன்படி ஜாதிகளை ஒழிப்பதில் தீவிரம் காட்டுவதை விட்டுவிட்டு, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோருவது முரண்பாடானதாக இருக்கிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பு ஜாதி அமைப்பை நிலைநிறுத்தும். பிரச்னைகளை அதிகரிக்கும்" என்று கூறியுள்ளார்.
பாஜக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தயக்கம் காட்டி வரும் நிலையில், அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் இதற்கு எதிராக பேசுவதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications