மிஸ்டர் ராகுல் காந்தி! சாவர்க்கரை இழிவுபடுத்தாதீங்க- 'பங்காளி' கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே வார்னிங்!
மும்பை: எங்களின் கடவுளாகிய வீர சாவர்க்கரை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இழிவுபடுத்தி பேசக் கூடாது என காங்கிரஸின் கூட்டணி கட்சியான சிவசேனா (தாக்கரே) கட்சியின் தலைவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2019-ம் ஆண்டு மோடி பெயர் தொடர்பாக பேசிய பேச்சு பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக அவதூறு வழக்கும் தொடரப்பட்டது. இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. மேலும் ராகுல் காந்தியின் வயநாடு (கேரளா) லோக்சபா தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. இது நாட்டில் பெரும் சர்ச்சை, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பாஜக அரசின் இந்த பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். என்னுடைய பெயர் சாவர்க்கர் அல்ல.. நான் காந்திதான். மன்னிப்பு கேட்க முடியாது என ஆவேசமாக கூறினார். மேலும் இந்த தேசத்துக்காக தொடர்ந்து போராடுவேன் என்றார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மகாராஷ்டிரா சட்டசபையில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, சாவர்க்கர் மராட்டியர்களின் தெய்வம். ஒட்டுமொத்த இந்தியாவின் அடையாளம் சாவர்க்கர். பிரதமர் மோடி, சாவர்க்கரை இழிவுபடுத்தி பேசி இருக்கிறார் ராகுல் காந்தி. மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை என்கிறார் ராகுல் காந்தி. இப்படி எல்லாம் ராகுல் காந்தி பேசினால் அவரால் தெருவில் நடமாட முடியாது என எச்சரித்திருந்தார்.
தற்போது காங்கிரஸ் கூட்டணி கட்சியான சிவசேனா (தாக்கரே) தலைவர் உத்தவ் தாக்கரேவும் இதே குரலில் ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில், எங்களின் கடவுள்தான் சாவர்க்கர். அவரை இழிவுபடுத்தி பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும். சாவர்க்கரை இழிவுபடுத்துவதை எல்லாம் சகித்துக் கொண்டிருக்க முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே நாங்கள் காங்கிரஸ், என்சிபியுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். ஆனால் ராகுல் காந்தி எங்களை சீண்டும் வகையில் பேசி இருக்கிறார் என ஆவேசப்பட்டார்.












Click it and Unblock the Notifications