தர்பூசணி பார்த்தாலே தயக்கம்? மும்பை சந்தையில் மள மளவென கீழே போன பழம் விலை

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் தர்பூசணி விலை தாறுமாறாக இறங்கி உள்ளது.. மும்பையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், கிலோ கணக்கில் லாபம் பார்த்து வந்த விவசாயிகளும் வியாபாரிகளும், வாடிக்கையாளர்கள் இல்லாததால் தர்பூசணியைக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். தர்பூசணி குறித்த பயம் பொதுமக்களுக்கு நீங்கினால் மட்டுமே , இந்த விலை இயல்பு நிலைக்கு திரும்பும் என்கிறார்கள் வியாபாரிகள்.

தெற்கு மும்பையைச் சேர்ந்த அப்துல்லா டோகாடியா, அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் என மொத்தம் 4 பேர் கடந்த சனிக்கிழமை இரவு பிரியாணி சாப்பிட்டு முடித்த கையோடு, தர்பூசணியையும் சாப்பிட்டுள்ளனர்.

Watermelon price drop in Mumbai

மும்பை தர்பூசணி விலை சரிவு

சிறிது நேரத்திலேயே வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 4 பேருமே அடுத்தடுத்து மரணமடைந்தது ஒட்டுமொத்த நகரையும் உலுக்கி விட்டது.. இந்த சோகமான செய்தி பரவியதில் இருந்து, மக்கள் தர்பூசணி பழத்தை வாங்குவதற்கே அச்சப்படுகின்றனர். அதுவும் கோடை தொடங்கிய நிலையில் தர்பூசணியை பார்த்தாலே லேசான கலக்கமும் வந்துள்ளதாம்.

இதன் நேரடி தாக்கம் ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையான நவி மும்பை ஏபிஎம்சி (APMC) சந்தையில் எதிரொலித்துள்ளது. கோடை காலத்தில் வழக்கமாக தர்பூசணிக்கு இருக்கும் கடும் கிராக்கி குறைந்து, தற்போது அதன் தேவை அப்படியே சரிந்துவிட்டது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ 10 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்கப்பட வேண்டிய தர்பூசணி, தற்போது வெறும் 5 முதல் 7 ரூபாய்க்கு மட்டுமே கேட்கப்படுவதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

தர்பூசணி பிரியாணி நச்சு?

மருத்துவ ரீதியாக பார்த்தால், சிக்கன் பிரியாணிக்கும் தர்பூசணிக்கும் எந்த நேரடி பகையும் கிடையாது என்று நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். எனினும் தர்பூசணியில் இருக்கும் அதிகப்படியான நீர்ச்சத்தும் சர்க்கரையும், அது லேசாக அசுத்தமாக இருந்தாலோ அல்லது பழத்தின் நிறத்தை அதிகரிக்க ரசாயனங்கள் ஊசி மூலம் ஏற்றப்பட்டிருந்தாலோ பாக்டீரியாக்களை வேகமாக வளரச் செய்யும். இந்த விவகாரத்தில் உணவு நஞ்சானதுதான் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இரவு நேரங்களில் செரிமானம் மந்தமாக இருக்கும் என்பதால், பழங்களை முறையாகக் கழுவாமல் உண்பதோ அல்லது ரசாயனம் கலந்த பழங்களை வாங்குவதோ ஆபத்தை விளைவிக்கும்.

தர்பூசணி விலை எப்போது சீராகும்?

இந்த ஒரு குடும்பத்தின் மரணம் ஒட்டுமொத்த தர்பூசணி சந்தையையே முடக்கியுள்ள நிலையில், பழங்களை வாங்கும் போது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தர்பூசணியை விட அதன் மீது செலுத்தப்படும் ரசாயனங்களே ஆபத்தானது என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தர்பூசணி வாங்கும் போது அதன் மேல்பகுதி வழக்கத்திற்கு மாறாக அதிக சிவப்பு நிறத்திலோ அல்லது ஒருவித ரசாயன வாசனையுடனோ இருந்தால் தவிர்ப்பது நல்லது.

பொதுவாக பழங்களை வெட்டியவுடன் சாப்பிட்டு விடுவது சிறந்தது; மாறாக நீண்ட நேரம் திறந்த நிலையில் வைத்திருந்த பழங்களையோ அல்லது பிரிட்ஜில் வைத்து எடுத்த குளிர்ந்த பழங்களையோ இரவு நேரங்களில் உண்பது செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும். இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க, பழங்களை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு, சரியான நேரத்தில் அளவோடு உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது என்கிறார்கள் நிபுணர்கள்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+