லோக்சபா தேர்தல் முடிவு வர போகுது! அடுத்த வாரம் பங்குச்சந்தை உச்சம் தொடலாம்- ஆனா ஒரு சிக்கலும் இருக்கு
மும்பை: நமது நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாகும் நிலையில், இது பங்குச்சந்தையில் மூன்று விதமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
கடந்த 1.5 மாதங்களாக நடந்து வந்த லோக்சபா தேர்தல் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று இறுதிக் கட்ட லோக்சபா தேர்தல் மொத்தம் 57 தொகுதிகளில் நடைபெறுகிறது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள்.

மறுபுறம் லோக்சபா தேர்தல் தொடங்கியது முதலே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடனேயே வர்த்தகமாகி வருகிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், பங்குச்சந்தை டிரெண்ட் அதைப் பொறுத்தே இருக்கும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
லோக்சபா தேர்தல்: கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்துள்ள நிலையில், இது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராகப் போகலாம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பு வாக்குப்பதிவு குறைந்தாலும் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியில் தொடரப் போவது உறுதி என்றே கூறி வருகின்றனர்.
கடந்த 2019இல் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மொத்தமுள்ள 543 இடங்களில் 352 இடங்களை வென்றது.. அதிலும் குறிப்பாக பாஜக மட்டும் 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்த முறை அந்த 300 இடங்களைக் காட்டிலும் சீட் குறைந்தாலும் கூட அது பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். தேர்தல் முடிவுகள் 3 வகையில் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
முதல் சான்ஸ்: முதல் வாய்ப்பு.. 2019ஆம் ஆண்டை விட பாஜக கூடுதல் இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிப்பது. இதுபோல பாஜக வென்றால் பங்குச்சந்தை உயரும் என்று ஐடிஐ மியூச்சுவல் ஃபண்டின் தலைமை முதலீட்டு அதிகாரி ராஜேஷ் பாட்டியா தெரிவித்துள்ளார். பாஜக தொழில்துறையினருக்கு ஆதரவான கொள்கைகளை உருவாக்கும் என்பதால் பாஜகவின் வெற்றி பங்குச்சந்தையைப் பெரியளவில் உயர்த்தும்.
பாஜக பெரியளவில் வெல்லும் போது பங்குச்சந்தை 4-5% வரை உயரும் என்று ஐஎஃப்ஏ குளோபலின் நிறுவனர் அபிஷேக் கோயங்கா கூறினார். அதேபோல டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் கணிசமாக உயரக்கூடும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். பிரதமர் மோடி மீண்டும் வெல்வது நாட்டில் உள்ள அரசியல் ஸ்திரத்தன்மையைக் குறிக்கிறது. மேலும், இதுவரை இருந்த கொள்கைகளே தொடரும் என்பதால் பங்குச்சந்தை இதை பாசிட்டிவாக பார்க்கும் என்று abrdn என்ற முதலீட்டு நிறுவனத்தின் இயக்குநர் ஜேம்ஸ் தாம் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது சான்ஸ்: அடுத்த 2ஆவது வாய்ப்பு.. பாஜக வென்றாலும் குறைவான சீட்களில் வெல்வது.. பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 2019ஆம் ஆண்டை விடக் குறைவான இடங்களைப் பெற்றாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களுக்கு மேல் இருந்தால், பங்குச்சந்தை சில காலம் சரியும். இருப்பினும், சில நாட்களில் சந்தை சீரடைந்துவிடும். ஆனால் ஏற்கனவே சந்தை இதற்கேற்ப சரிந்துவிட்டதாகவே பங்குச்சந்தை வல்லுநர் கௌரவ் துவா கூறியுள்ளார்.
அதேநேரம் பாஜக 300க்கும் குறைவான இடங்களில் வென்றாலும் ஆட்சியைப் பிடித்துவிட்டால் அது பங்குச்சந்தையில் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்றே சாம்கோ அசெட் மேனேஜ்மென்ட்டின் தலைமை முதலீட்டு அதிகாரி உமேஷ்குமார் மேத்தா தெரிவித்தார். ரூபாய் மதிப்பும் பெரியளவில் சரியாது என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
கடைசி சான்ஸ்: அடுத்து மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பு பாஜக தோற்று, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றுவது. இதுபோன்ற நிகழ்வு நடந்தால் புதிய அரசின் தொழில்துறை கொள்கைகள் தெளிவாகும் வரை பங்குச்சந்தையில் பெரியளவில் சரியும். புதிய அரசின் பாலிசி உடனடியாக தெரியாது என்பதாலேயே இந்தச் சூழல் ஏற்பட்டால் சந்தை சரியும் என்கிறார் மியூச்சுவல் ஃபண்டின் ஈக்விட்டி மூத்த நிதி மேலாளர் மிட்டுல் கலாவாடியா கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நீண்ட கால நோக்கில் சந்தை ஏற்றத்தின் பாதையில் செல்லுமா அல்லது இறங்குமா என்பது நாட்கள் செல்ல செல்லத் தான் தெரியும். ஆனால், குறுகிய காலத்தில் பாலிசியில் குழப்பம் நிலவும் என்பதால் சந்தை சரியும்" என்றார். அதிகட்சமாக பங்குச் சந்தை 10% முதல் 20% வரை சரியும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். அப்போது ரூபாய் மதிப்பும் சரிவடையும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications