பாஜகவை அலறவிடும் ‛இந்தியா‛ கூட்டணி! மும்பையில் முக்கிய திருப்பம்.. சரத்பவார், லாலு, கெஜ்ரிவால் பரபர
மும்பை: மும்பையில் ‛இந்தியா' கூட்டணியின் 2 நாள் ஆலோசனை கூட்டம் இன்று நிறைவு பெற்றது. இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ள நிலையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி இந்தியா கூட்டணிக்கு திருப்பம் கொடுத்துள்ள இந்த கூட்டம் பற்றி சரத்பவார், லாலு பிரசாத் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை தோற்கடிக்கும் வகையில் 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த ‛இந்தியா' கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்றும், இன்றும் நடந்தது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி உள்பட 28 கட்சிகளின் 63 தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மாநிலங்கள் வாரியாக தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டது. மேலும் ‛இந்தியா' கூட்டணி சார்பில் ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மொத்தம் 13 பேர் இடம்பிடித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சி. வேணுகோபால், தேசியவாத காங்கிரஸை சேர்ந்த சரத் பவார், தி.மு.க.வை சேர்ந்த டிஆர் பாலு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அபிஷேக் பானர்ஜி, சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த லல்லன் சிங், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சாடா, ஜனதா முக்தி மோர்சா கட்சியின் ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஜாதவ் அலி கான், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.ராஜா, தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மெஹ்பூபா முப்தி இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இதையடுத்து ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் மொத்தமாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த வேளையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறுகையில், ‛‛இந்தியா கூட்டணியின் 3 ஆலோசனை கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டங்களின் மூலம் நாங்கள் ஒரு திட்டத்தை வகுத்துள்ளோம். ஒவ்வொரு மாநிலங்களிலும் வெவ்வேறு வகையான சூழல்கள் உள்ளன. விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இதனை நிவர்த்தி செய்து பாஜகவை வீழ்த்த முக்கிய திட்டத்தை வகுத்துள்ளோம்'' என்றார்.

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், ‛‛மாநிலங்கள் வாரியாக தொகுதி பங்கீட்டு செய்வதற்கான ஏற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்க உள்ளோம். இந்த தொகுதி பங்கீடு என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். இதனை சுமூகமாக முடிக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. எங்களது செயல்பாட்டால் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு திணறி வருகிறது'' என்றார்.
அதேபோல் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ‛‛எங்களது மீட்டிங் சிறப்பான முறையில் இருந்தது. ‛இந்தியா' கூட்டணியை வெற்றி பெற வைப்பதில் அனைவரும் பொறுப்பேற்று செயல்பட முன்வந்துள்ளோம். ஊழல் நிறைந்த பாஜகவின் ஆட்சிக்கு ‛இந்தியா' கூட்டணி முடிவு கட்டும்'' என்றார்.
ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், ‛‛ நாட்டில் விலைவாசி உயர்வை நாம் அனைவரும் எதிர்கொண்டு வருகிறோம். வதந்திகளை பரப்பி, பொய்களை கூறி பாஜகவின்ர ஆட்சியை பிடித்துள்ளனர். ரூ.15 லட்சத்தை ஒவ்வொருவரின் வங்கி கணக்குக்கு தருவதாக மோடி பேசினார். ஆனால் என்ன நடந்தது?. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவுக்கு ‛இந்தியா' கூட்டணி முற்றுப்புள்ளி வைக்கும்'' என்றார்.












Click it and Unblock the Notifications