ஆர்எஸ்எஸ் + மோடி ஆதரவு இருந்த போதும் ஓரங்கட்டப்படும் ஃபட்னாவிஸ்? இதுதான் மகாராஷ்டிர அரசியல் கணக்கு
மும்பை: மகாராஷ்டிராவில் விரைவில் தேர்தல் நடக்கும் நிலையில், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதே பலருக்கும் எழும் கேள்வியாக உள்ளது. அவருக்கான ஆதரவு எந்தளவுக்கு இருக்கிறதோ.. அதே அளவுக்கு எதிர்ப்பும் இருக்கிறது. இதனால் பட்னாவிஸ் விவகாரத்தில் பாஜக தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் திணறுகிறதாம்.
மகாராஷ்டிர மக்களிடையே தெரிந்த முகம்.. இளைஞர்களின் ஆதரவு உள்ளவர்.. சொன்னதைச் செய்யும் தலைவராகப் பார்க்கப்படுபவர்.. ஆர்எஸ்எஸ் ஆதரவு இருப்பவர், பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரிய நபர் என்று ஃபட்னாவிஸுக்கு ஆதரவாகப் பல பாயிண்டுகள் உள்ளன. ஆனால், கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிர அரசியலில் நடக்கும் சம்பவங்கள் அவரது எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குவதாக இருக்கிறது.

வரிசைகட்டி நிற்கும் பிரச்சினைகள்: முதலில் 2019 சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையைப் பெறத் தவறியது. அதன் பிறகு எப்படியோ கூட்டணி ஆட்சியை அமைத்தாலும் மக்களிடையே செல்வாக்கை இழந்து வருவதாகவே கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கடந்த 2019 தேர்தலில் 23 இடங்களில் வென்ற பாஜகவால் இந்த முறை வெறும் 9 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதற்கும் ஃபட்னாவிஸ் தான் காரணம் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.
மேலும், பட்னாவிஸ் டெல்லி பாஜகவுக்கு அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பாஜக தலைவர் இருந்த நட்டா இப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். எனவே, புதிய பாஜக தலைவராகத் தேவேந்திர ஃபட்னாவிஸ் நியமிக்கப்படலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
முதல்வர் பதவி: வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையைப் பெறவில்லை என்றால் ஃபட்னாவிஸுக்கு முதல்வர் பதவி நிச்சயம் கிடைக்காது. ஏனென்றால் அங்குள்ள 288 சீட்களில் 40 இடங்களில் வென்றாலும் ஷிண்டே தரப்புக்கு முதல்வர் பதவி தரப்படும் என்ற உத்தரவாதத்தை பாஜக அளித்துள்ளதாம்.இதன் காரணமாகவே அவரை பாஜக தேசிய தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. குறிப்பாக ஆர்எஸ்எஸ் தரப்பில் இருந்து இந்த கோரிக்கை அதிகம் வருகிறதாம்.
அதேநேரம் தேர்தல் நெருங்கும் நிலையில், அதற்கு முன்பு எந்தவொரு மாற்றமும் இருக்கக்கூடாது என்று மற்றொரு தரப்பு எச்சரிக்கிறது. மகாராஷ்டிர மக்கள் முழுக்க தெரிந்த முகமாக ஃபட்னாவிஸ் உள்ள நிலையில், கடைசி நேரத்தில் அவரது பதவியைப் பறித்தால் அது தவறான சிக்னலாக போய்விடும் என்று மற்றொரு தரப்பினர் எச்சரிக்கிறார்கள்.
எதிர்ப்பாளர்கள் கருத்து: அவரது எதிர்ப்பாளர்களும் கூட ஃபட்னாவிஸுக்கு தேசியளவில் கட்சி பதவி தர எதிர்ப்பே தெரிவிக்கிறார்கள். மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலில் பாஜக தோல்விக்கு ஃபட்னாவிஸ் தான் முக்கிய காரணம். வேட்பாளர் தேர்வு தொடங்கித் தேர்தல் யுக்தியை வடிவமைத்தது வரை எல்லாமே அவர் தான். அப்படி இருக்கும் போது தேர்தலில், தோல்விக்காகப் பொறுப்பேற்க வேண்டுமே தவிர புதிய பதவியைத் தரக்கூடாது என்று அவர்கள் எதிர்க்கிறார்கள். மேலும், மாநிலத்தில் உள்ள மற்ற பாஜக தலைவர்களையும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஓரங்கட்டுவதாகவும் புகார்கள் உள்ளன.
இதுபோக மராத்தா இட ஒதுக்கீட்டுப் போராட்டங்களின் போது துப்பாக்கிச் சூடு நடத்தியதும் ஃபட்னாவிஸுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. மகாராஷ்டிராவில் தேர்தல் நடக்கும் நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. உள் துறை ஃபட்னாவிஸ் வசம் இருக்கும் நிலையில், இந்த குற்றச்சாட்டும் அவர் மீதே விழுந்துள்ளது.
அவ்வளவு ஈஸி இல்லை: இப்படி அவர் மீது பல புகார்கள் இருந்தாலும் அவரை மாற்றுவது எளிதான காரியம் இல்லை. முக்கியமான தேர்தலுக்கு சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதற்குள் ஃபட்னாவிஸ் போல அனைத்து தரப்பு ஆதரவையும் பெற்ற ஒருவரைக் கண்டுபிடிப்பது சிரமம். சில 2ம் கட்ட தலைவர்கள் இருந்தாலும் தேர்தல் காலத்தில் தேவையில்லாத பரீட்சை என்றே பலரும் நினைக்கிறார்கள்.
மேலும், ஃபட்னாவிஸ் தரப்பும் கூட டெல்லி செல்ல விரும்பவில்லையாம். இந்த முறை டெல்லிக்குச் சென்றுவிட்டால் மீண்டும் மகாராஷ்டிர அரசியலுக்கு வருவது கடினம் என்பதால் அவர் இங்கே இருப்பதாக விரும்புகிறாராம். இந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக அங்கு வெல்கிறதா அல்லது தோல்வியை தழுவுகிறதா என்பதைப் பொறுத்தே ஃபட்னாவிஸின் எதிர்காலம் அதைப் பொறுத்தே இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications