இலவச மின்சாரம், இலவச அரிசி, பெண்களுக்கு ரூ2,000.. கர்நாடகா தேர்தல் களத்தை பரபரக்க வைத்த பிரியங்கா
மைசூரு: கர்நாடகா தேர்தல் பிரசார களத்தில் குதித்துள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. மைசூருவில் தேர்தல் பிரசாரம் செய்த பிரியங்கா காந்தி, இலவச மின்சாரம், இலவச அரிசி, பெண்களுக்கு ரூ2,000 வழங்கப்படும் என உறுதியளித்தார்.
மைசூருவில் பிரியங்கா தேர்தல் பிரசாரத்தின் போது பேசியதாவது: அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் தர்மங்களில் ஒன்று சேவை என்பது. கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணிக்குதான் மக்கள் வாக்களித்தனர். ஆனால் பண பலத்தால் பாஜக ஆட்சி அதிகாரத்தை பறித்துக் கொண்டது.

மாநிலங்களுக்கான நிதியை மத்திய பாஜக அரசு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குறைத்து வருகிறது. கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு உங்களை சூறையாடிவிட்டது. இங்கே நடப்பது 40% கமிஷன் பெறுகிற அரசாங்கம்தான்.
பாஜக அரசானது கொரோனா நிதியை செலவிடவில்லை. பள்ளி குழந்தைகளுக்கான மத்திய உணவு திட்டத்தை செயல்படுத்தவில்லை. மாநில அரசு பணிகள் காலியாக இருக்கின்றன. இந்த நிதியும் வேலைவாய்ப்பும் உங்களுடையது என்பதை மறந்துவிடாதீர்.
இடஒதுக்கீடு குறித்து பாஜக பொய் பிரசாரம் செய்து வருகிறது. கர்நாடகா மக்களுக்கான இடஒதுக்கீடு அளவை பாஜக அதிகரிக்கவில்லையே ஏன்? அதிகாரத்தில் இருக்கும் வரை இதனை செய்யவில்லையே ஏன்? கர்நாடகாவின் பெருமைமிகு அடையாளமான நந்தினி பாலுக்கு மாற்றாக குஜராத்தின் அமுல் பால் நிறுவனத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் பால் உற்பத்தியில் மிகை மாநிலமாக திகழ்ந்ததை நினைவில் கொள்ள வேண்டும்.
தேர்தலுக்காக பசவண்ணா பெயரை தவறாகப் பயன்படுத்துகிறது பாஜக. வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் பசவண்ணாவின் ஆசீர்வாதம் உங்களுக்கும் கிடைக்காது என என்கின்றனர். இது பசவண்ணாவை இழிவுபடுத்துகிற பேச்சு. கர்நாடகா மக்களின் சுயமரியாதை சீண்டிப் பார்க்ககிறது பாஜக. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்திரா கேண்டீன் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த மாநிலத்தின் கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கர்நாடகாவில் ஆளும் பொம்மை அரசாங்கமோ கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக அக்கறை கொள்கிறது.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களைப் பாருங்கள்.. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். ஏழைகளுக்கான 10 கிலோ இலவச அரிசியை காங்கிரஸ் ஆட்சி வழங்கும். பட்டதாரிகளுக்கு மாதம் ரூ3,000 நிதி உதவி வழங்குவோம். பெண்களுக்கு மாதம் ரூ2,000 உதவித் தொகை வழங்குவோம். இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications