தமிழக மீனவர் படகை துளைத்த 47 குண்டுகள்..இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு..கடற்படை அதிகாரிகள் ஆய்வு
நாகப்பட்டினம்: இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதால் மீனவர் விசைப்படகில் 47 குண்டுகள் துளைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. 47 குண்டுகள் துளைக்கப்பட்டதற்கான ஓட்டைகள், செல்வம் என்பவர் விசைப்படகில் இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கடந்த 15ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த வீரவேல்,30 நாகை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த செல்வத்துரை, செல்வகுமார், சதீஷ் உள்பட 10 மீனவர்கள் விசைப்படகில் சென்று மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்படையினர் படகை நிறுத்த சொல்லி சிக்னல் கொடுத்தனர். படகை நிறுத்தாமல் வேகமாக மீனவர்கள் படகை செலுத்தினர். இதனையடுத்து சந்தேகமடைந்த இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

தமிழக மீனவர் காயம்
இதில் மயிலாடுதுறையை சேர்ந்த வீரவேல் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மீனவரை இந்திய கடற்படையினர் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மீனவர்களிடம் விசாரணை நடத்தியதில் இலங்கை கடற்படையினர் படகை நிறுத்த சொல்லுவதாக நினைத்து வேகமாக சென்றதாக கூறினர்.

முதல்வர் கடிதம்
இந்திய கடற்படையினர் செயலுக்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் 10 மீனவர்கள் தங்களது விசைப்படகில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஐ.என்.எஸ் பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்புப் பணியிலிருந்த இந்தியக் கடற்படையினர், இம்மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், திரு. வீரவேல் என்ற மீனவரின் மீது குண்டு பாய்ந்து, அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருவதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

பாதுகாப்பற்ற உணர்வு
இச்சம்பவத்தில் இந்தியக் கடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்படுவதால் ஏற்படும் துயரத்தை மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் நன்கு அறிவார்கள். இந்தியக் கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது என்றும் தனது கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

நிதானம் தேவை
எனவே, மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாளுவதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொலை முயற்சி வழக்குப் பதிவு
இந்த நிலையில் மீனவர் மீதான துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் , கொலை முயற்சி, மிக கடுமையான ஆயுதம் கொண்டு தாக்குதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் இந்திய கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இந்திய கடற்படை வீரர்களிடம், எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினீர்கள்? முறைப்படி எச்சரிக்கை சமிக்ஞை செய்தீர்களா ? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடப்பட்டது.

படகில் ஆய்வு
இதனிடையே நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகை இந்திய கடற்படை அதிகாரிகள்,கமாண்டர் விஷால் குப்தா ஆய்வு மேற்கொண்டார். இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதால் மீனவர் விசைப்படகில் 47 குண்டுகள் துளைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. 47 குண்டுகள் துளைக்கப்பட்டதற்கான ஓட்டைகள், செல்வம் என்பவர் விசைப்படகில் இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications