தவெக விஜய் பிரச்சார கூட்டத்தில் 4 சவரன் நகை திருட்டு! பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் பேட்டி!
நாகை: தவெக தலைவர் விஜய் நாகையில் இன்று பரப்புரையில் ஈடுபட்டபோது, கூட்டத்தில் பெண்ணிடம் இருந்து 4 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சுமதி என்பவர், தனது மகளுக்காக சேர்த்து வைத்ததாகவும், எப்படியாவது தனது நகையை மீட்டுக் கொடுங்கள் என்றும் வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தலைவர் விஜய், தேர்தல் சுற்றுப்பயணத்தை கடந்த வாரம் தொடங்கினார். இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இன்று மதியம் நாகை மாவட்டம் புத்தூரில் அண்ணா சிலை அருகே மக்களிடம் உரையாற்றினார் விஜய். தவெகவிற்கு மட்டும் பல தடைகள் விதிக்கப்படுவதாக விஜய் குற்றம்சாட்டினார்.

"நாம் செல்கின்ற இடத்தில் எல்லாம் நேரம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். நான் பேசுவதே 3 நிமிடம் தான். அதிலும் அதை பேசக்கூடாது, இதை பேசக்கூடாது எனக் கூறினால் நான் என்ன தான் பேசுவது. நம் கூட்டத்தில் மின் தடை ஏற்படுகிறது, மைக் வேலை செய்யவில்லை. ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவரோ, பிரதமர் மோடியோ அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ வருகின்றபோது இந்த மாதிரி பவர் கட் அல்லது வயர் கட் நடக்குமா?"
"நமக்கு நடப்பதைப் போன்ற கட்டுப்பாடுகளை அவர்களுக்கு விதிப்பார்களா? முதல்வரிடம் நேரடியாகவே கேட்கிறேன், மிரட்டிப் பார்க்கிறீர்களா? அதற்கு இந்த விஜய் ஆள் இல்லை, எங்கள் இயக்கமும் அதற்கு ஆள் இல்லை. மக்களைச் சந்திக்க ஏன் இத்தனை தடை விதிக்கிறீர்கள்?" என விஜய் கேள்வி எழுப்பினார்.
நாகைப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட விஜய் பேச்சை கேட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். அப்போது, தவெக தொண்டர்கள் திடீரென வடமாநில வாலிபர் ஒருவரை அடித்து உதைத்தனர். இதில் அந்த வாலிபர் மயங்கி விழுந்தார். பெண் ஒருவர் மகளுடன் கூட்டத்திற்கு சென்றபோது, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அந்த பெண்ணின் நகை கூர்ந்து கவனித்ததாகவும், இதனால் அந்த பெண் தன் மகளிடம் நகையை கழற்றி கொடுத்து பையில் வைக்கச் சொன்னதாகவும் தெரிகிறது.
பையில் இருந்த நகையை வடமாநிலத்தவர் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தவெக தொண்டர்கள் அந்த வாலிபரை அடித்து உதைத்துள்ளனர். ஆனால், அந்த நபரிடம் நகை இல்லை. நகையை பறிகொடுத்த சுமதி என்ற அந்த பெண், "அந்த நபர் மற்றொரு நபரிடம் நகையை கொடுத்துவிட்டார். 4 சவரன் செயின். எனது மகளுக்காக சேர்த்து வைத்து வாங்கியது, எப்படியாவது எனது நகையை மீட்டுக் கொடுங்கள் " என அந்த பெண் அழுதபடியே தெரிவித்தார்.
மேலும், போலீசாரிடம் புகார் கூறியபோது அவர்கள் எந்த நடடிவக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார். விசாரணைக்குப் பிறகே என்ன நடந்தது என்பது தெரியவரும். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications