107 வயது கோபாலகிருஷ்ணன்! பென்ஷன் பெறுபவர்களில் தமிழ்நாட்டிலேயே மூத்தவர்! வீடு தேடிச் சென்ற அமைச்சர்!
நாகை: ஓய்வூதியம் பெறுபவர்களில் தமிழ்நாட்டிலேயே வயதில் மூத்தவரான கோபாலகிருஷ்ணனை (107 வயது) அவரது இல்லம் தேடிச் சென்று சந்தித்து ஓய்வூதியர்களுக்கான ஆண்டு நேர் காணலை அமைச்சர் தங்கம் தென்னரசு நடத்தினார்.
கோபாலகிருஷ்ணன் கடந்த 1972ஆம் முதல் கடந்த 51 ஆண்டுகளாக அரசிடமிருந்து பென்ஷன் வாங்கி வருகிறார். ரிட்டையர்டு ஆன பிறகும் மாதம் மாதம் டான் டான்னு பணம் வருவதால் தான், காலனா ஊதியமாக இருந்தாலும் அது அரசு பணியாக இருக்க வேண்டும் என பலரும் அரசுப்பணிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கோபாலகிருஷ்ணன் நாகப்பட்டினம் மாவட்டக் கருவூலம் மூலமாக 01-05-1972 முதல் குடிமை ஓய்வூதியம் பெற்று வருகிறார். அவரது ஓய்வூதிய கொடுவை ஆணை எண். A-69690. ஓய்வூதியர் பிறந்த தேதி 26.10.1916. அவர் தற்போது 107 வயதை நிறைவு செய்துள்ளார். தமிழ்நாட்டில் ஓய்வூதியம் பெறுபவர்களில் கோபாலகிருஷ்ணன் தான் வயதில் மூத்தவர் ஆவார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரு வாரிசுகள் உள்ளனர்.
இவர் இரண்டாம் உலகப் போர் (1939 - 1945) நடைபெற்ற காலத்தில் ராணுவத்தில் I.E.M.E படை பிரிவில் சேர்ந்து மோட்டார் மெக்கானிக் மற்றும் கனரக வாகன ஓட்டுநராக Lans Nayak பதவி நிலையில் ஐந்து வருடங்கள் பணிப்புரிந்துள்ளார். அப்போது பர்மா, மணிப்பூர் போன்ற இடங்களில் நடைபெற்ற போரில் பங்கெடுத்துள்ளார். அன்றைய காலக்கட்டத்தில் ஐந்து பதக்கங்களையும் பெற்றுள்ளார். அதன் பிறகு ஒன்றிய அரசுப்பணியில் சில காலம் சுங்கத்துறையில் பணியாற்றி உள்ளார்.
அதன் பிறகு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்து நாகப்பட்டினம், காவல் நிலையம் - திட்டச்சேரியில் காவலராக (Police Constable) பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரை கௌரவிக்கும் விதமாக அமைச்சர் தங்கம் தென்னரசு, கருவூல கணக்குத்துறை ஆணையர் விஜயேந்திர பாண்டியன், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங், ஓய்வூதியர் வசித்து வரும் இல்லத்திற்கு நேரில் சென்று ஓய்வூதியர்களுக்கான ஆண்டு நேர் காணலை மேற்கொண்டதுடன் நேர்காணல் சான்றிதழை அளித்து கௌரவித்தார்கள்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் 100 வயது நிறைவு செய்துள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களை கௌரவிக்கும் விதமாக அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்களும் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்து கௌரவிக்க கருவூல கணக்குத்துறை ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications