திடீரென நிறம் மாறிய "கடல்".. கொத்து கொத்தாக மிதக்கும் மீன்கள்.. அதென்ன குழாய்கள்..அதிர்ச்சியில் நாகை
கடல் நீர் மாசுப்பட்டிருப்பதை கொந்தளித்து போயிருந்த கிராம மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் கடலுக்கு அடியில் பதிக்கப்பட்ட ராட்சத கச்சா எண்ணெய் குழாய் உடைந்ததில் அந்தக் கடற்பகுதி முழுவதும் கறுப்பாக மாறியுள்ளது.
கச்சா எண்ணெய் கசிவு அதிகரிப்பதால் கடல் மீன்கள், நண்டு போன்ற உயிரினங்கள் கொத்து கொத்தாக உயிரிழந்து கரை ஒதுங்கி வருகின்றன.
தங்களுக்கு உணவு வழங்கும் கடல், அரசாங்கத்தின் அலட்சியத்தால் இப்படி மாசுப்பட்டு வருவதை பார்த்து கொந்தளித்துள்ள நாகை மக்கள், போராட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ராட்சத கச்சா எண்ணெய் குழாய்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது பட்டினச்சேரி மீனவ கிராமம். இங்குள்ள கடல் பகுதியில் சென்னை பெட்ரோலியக் கழகத்திற்கு சொந்தமான பல கி.மீ. நீளம் கொண்ட கச்சா எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெட்ரோலிய கழகத்தின் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கப்பலுக்கும், கப்பலில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்துக்கும் கச்சா எண்ணெய்யை எடுத்துச் செல்ல இந்த ராட்சத குழாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2003-ம் ஆண்டு இந்தக் குழாய் கடலுக்கு அடியில் பதிக்கப்பட்ட போதே, அப்பகுதி மீனவ மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், அவர்களை சமாதானப்படுத்தி இந்தக் குழாய் அங்கு அமைக்கப்பட்டது.

கறுப்பாக மாறிய கடல்
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு பட்டினம்சேரி கடல்பகுதியில் உள்ள கச்சா எண்ணெய் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வெள்ளிக்கிழமை அதிகாலையில் வழக்கம் போல மீன்படிக்க சென்ற மீனவர்கள், கடல் நீர் அடர் கறுப்பு நிறத்தில் மாறியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும், கடலுக்கு அருகில் கூட செல்ல முடியாத கச்சா எண்ணெய்யின் நெடி இருந்துள்ளது. மேலும், இந்த கிராமத்துக்கு அருகே சாமந்தான்பேட்டை வரை கடல் நீர் கச்சா எண்ணெய் கசிவால் கறுப்பாக மாறியது.

மீனவ மக்கள் கொந்தளிப்பு
இதுகுறித்து மீனவர்கள் போலீஸாருக்கும், வருவாய் துறைக்கும் தகவல் அளித்தனர். பின்னர், சென்னை பெட்ரோலிய கழகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு அந்த அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது கடல் நீர் மாசுப்பட்டிருப்பதை கொந்தளித்து போயிருந்த கிராம மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலில் பதிக்கப்பட்ட குழாயை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் போலீஸார் அங்கு வந்து மீனவ மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அதிகாரிகளை விடுவித்தனர். இதன் தொடர்ச்சியாக, பெட்ரோலிய கழக அதிகாரிகளும், ஒஎன்ஜிசி அதிகாரிகளும் குழாய் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செத்து மிதக்கும் மீன்கள்
எனினும், கடல் கொந்தளிப்புடன் இருப்பதால் இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, கச்சா எண்ணெய் கசிவதால் கடலில் உள்ள மீன்கள், நண்டுகள் உள்ளிட்ட உயிரினங்கள் கொத்து கொத்தாக செத்து கரை ஒதுங்கி வருகின்றன. மேலும், கச்சா எண்ணெய்யில் இருந்து வெளியாகும் வாயுவால், அப்பகுதி மக்களுக்கு தோல் அரிப்பு, கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications