கருணாநிதி வீடு முன்பு திரண்டு உண்ணாவிரத போராட்டம்.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த பெண்கள்.. பரபரப்பு!
திருக்குவளையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 5 பெண்கள் மயங்கி விழுந்தனர்.
நாகப்பட்டினம் : திருக்குவளையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த இல்லம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலப் பணியாளர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் மயங்கி விழுந்தவர்களை காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதத்தை தொடர்ந்த நிலையில், 5 பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

மக்கள் நலப் பணியாளர்கள்
திமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நலப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டு, அதிமுக ஆட்சிக்காலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருணாநிதி பிறந்த வீட்டின் முன் போராட்டம்
திமுக தேர்தல் வாக்குறுதயின்படி, தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்றும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டின் முன்பு 2000த்திற்கும் மேற்பட்டோர் திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5 பேர் மயக்கம்
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 2000-த்திற்கும் மேற்பட்டோர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த இல்லம் முன்பாக திரண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கட்டாயப்படுத்தி அகற்ற முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொற்கொடி, மகேஸ்வரி, பரமேஸ்வரி, செங்கனி, துளசியம்மாள் ஆகிய ஐந்து பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறை வாகனத்தில்
ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால், உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக காவல்துறை வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தற்காலிகமாக வாபஸ்
நாளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் வருகை தரவிருக்கும் நிலையில், பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி போராட்டத்தைக் கைவிட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசு அதிகாரிகள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து, தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சென்னையில் கருணாநிதி நினைவிடம் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications