நாகையில் சுனாமியின் போது தத்தெடுத்த மகளுக்கு திருமணம்! ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆனந்தக் கண்ணீர்!
நாகை: நாகப்பட்டினத்தில் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தனது வளர்ப்பு மகளுக்கு திருமணம் செய்து வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 2004ஆம் ஆண்டு சுனாமியின் போது நாகையில் தாய் தந்தையை இழந்த பெண்ணை தனது மகளாக தத்தெடுத்தார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி எனும் இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகள், மக்களையும், வீடுகளையும் அப்படியே இழுத்து சென்ற அலைகள், ஆங்காங்கே அழுகுரல், ஆதரவற்ற நிலையில் சொந்தங்கள் என இருந்ததை யாராலும் அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது.

இந்த சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் ஆன நிலையிலும் ஒவ்வொரு முறையும் சுனாமி நினைவு நாளின் போது அனைவரது மனமும் பதைபதைப்பாகவே இருக்கிறது. இந்த நாளில் நம் சொந்தங்களை இழந்துவிட்டோமே என பலர் கண்ணீர் விடுகிறார்கள்.
அப்படி சுனாமியால் சேதமடைந்த மாவட்டங்களில் நாகையும் ஒன்று. அப்போது அங்கு ஆட்சியராக இருந்தவர் ராதாகிருஷ்ணன், இவர் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார். மேலும் சுனாமியால் பெற்றோரை இழந்த குழந்தைகளை காப்பகத்தில் சேர்த்துவிட்டு பாதுகாத்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக அவர் பெற்றோரை இழந்த இரு பெண் குழந்தைகளையும் தத்தெடுத்தார். அவர்களுக்கு சவுமியா, மீனா என பெயரிட்டு காப்பகத்தில் தங்க வைத்து வளர்த்தார். அவர்களுக்கு நல்ல கல்வியையும் கொடுத்தார்.
இந்த நிலையில் மீனாவிற்கு நேற்று ராதாகிருஷ்ணன் தலைமையில் திருமணம் நடந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

வளர்ப்பு மகளின் திருமணம் தொடர்பாக ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினத்தில் ஒரு மனதைக் கவரும் வகையிலான சந்திப்பு இது. நாகப்பட்டினத்தில் மீனா & மணிமாறன் திருமணத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. சுனாமிக்குப் பிந்தைய நாகைப் பிள்ளைகளுடனான எங்களின் பயணம் எப்போதும் நம்பிக்கைக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. மீனா & சௌமியா ஆகியோர் நெகிழ்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.
சௌமியா, சுபாஷ் மற்றும் சிறுமி சாரா ஆகியோர் தங்கள் தோழியின் சிறப்பு நாளைக் கொண்டாடும் போது மனதை கொள்ளை கொள்வதாக இருக்கிறது. கிருத்திகா, அரவிந்த் மற்றும் அந்த நாட்களில் இருந்த நண்பர்களுடன், அன்னை சத்திய இல்லம் மற்றும் அங்கு பணியாற்றிய பராமரிப்பாளர்களான தமிழரசி, வினோதா, சாதனா மற்றும் இன்னும் பலர் இணைந்த நினைவுகளை மீண்டும் கொண்டு வருவதற்கு மத்தியில், காலம் எவ்வாறு கடந்தது என்பதை சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.

மறைந்த சூர்யகலா இந்த நேரத்தில் எங்களுடன் இருந்திருக்கலாம். ஆனால் குழந்தைகளின் பராமரிப்பையும் வளர்ப்பையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதில் மலர்விழி, மணிவண்ணனின் அர்ப்பணிப்பு எனது மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்கள் வளர்ந்து படித்து பட்டம் பெற்றதை பார்க்கும் போது ஆனந்தக் கண்ணீர் வழிகிறது. இவர்கள் எல்லாம் ரத்த சொந்தங்களுக்கு அப்பால் வளர்ந்தவர்கள். இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்த யாழினி திருமண மண்டபம் மற்றும் வெங்கடேஷுக்கு நன்றிகள். இவ்வாறு ராதாகிருஷ்ணன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications