“காதல் தோல்வி மனநிலையில் உங்களை சந்திக்கிறேன்..” தேர்தல் பரப்புரையில் மனமுருகிய சீமான்
நாகப்பட்டினம்: லோக்சபா தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், நாகையில் பேசிய சீமான், “காதல் தோல்வி மனநிலையில் உங்களை சந்திக்கிறேன்” என்று பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நாகப்பட்டினத்தை பொறுத்த அளவில், இந்த தொகுதியை திமுக தனது கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு(சிபிஐ) ஒதுக்கியிருக்கிறது. சிபிஐ சார்பில் செல்வராஜ் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரன் ஊராட்சி கீழநாலாநல்லூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் வை.செல்வாஜ் (வயது 62). மன்னார்குடி அரசுக்கலைக் கல்லூரியில் பி.ஏ, பூண்டி புஷ்பம் கல்லூரியில் (எம்.ஏ, எம்.பில் ) முதுகலை கல்வி ஆராய்ச்சி பட்டம் வரை பெற்ற இவர், கல்லூரியில் படிக்கும் பொழுதே அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின், மாணவர் இயக்க தலைவராக பணியாற்றியிருக்கிறார்.
1980ம் ஆண்டு கட்சி உறுப்பினராக சேர்ந்து, தன்னை முழுநேர அரசியல் பணியில் ஈடுபடுத்தி கொண்ட அவர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் செயலாளராக அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றிய செயலாளராக 12ஆண்டு காலம் செயல்பட்டிருக்கிறார்.
அதேபோல அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். மறுபுறம் பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷும், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா என்பவரும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிகம் என்பதால் சிபிஐ வேட்பாளருக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இருப்பினும் மற்றக்கட்சியினர் தீவிரமாக பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்திகாவுக்கு அதரவாக சீமான் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கிறார். நேற்று பிரசாரத்தில் அவர் பேசும்போது “காதல் தோல்வி மனநிலையில் உங்களை சந்திக்கிறேன்” என்று பேசியிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
பரப்புரையில் அவர் பேசியதாவது, “ஊழல் செய்த சிறைக்கு சென்ற தலைவர்கள்தான் மீண்டும் உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு வாக்களித்தால், தூக்க போகும் போது வாயில் கொஞ்சம் அரிசியை போட்டு படுத்துக்கொள்ளுங்கள். நானும் கடந்த 18 வருடங்களாக உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறேன். தொண்டை கிழிய கத்துகிறேன். டாக்டரும் இனி கத்த வேண்டாம், வெயிலில் சுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் என்ன செய்வது, உடன் பிறந்துவிட்டேனே.
காதலித்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துவிட்டு சென்றுவிட்டால், எப்படி மறக்க முடியாமல் தவிப்போமோ அது மாதிரி தவித்துக்கொண்டிருக்கிறேன். புரிந்துக்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார். இவருடைய பேச்சு சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications