பா ரஞ்சித் சூட்டிங்கில் இறந்த ஸ்டண்ட் கலைஞர்.. ‛வேட்டுவம்' படப்பிடிப்பில் சோகம்.. என்ன நடந்தது?
நாகப்பட்டினம்: இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் ‛வேட்டுவம்' படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞரான மோகன் ராஜ் காரில் இருந்து தவறி விழுந்தார். அதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் மருத்துவமனையில் மோகன் ராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் பா ரஞ்சித். இவர் நடிகர் விக்ரமை வைத்து ‛தங்கலான்' என்ற படத்தை எடுத்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

இதையடுது்து பா ரஞ்சித் அடுத்த படமாக ‛வேட்டுவம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். பா ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
அந்த வகையில் நடிகர்கள் ஆர்யா, ‛அட்டகத்தி' தினேஷ், அசோக் செல்வன், கலையரசன், ஜான் விஜய் உள்பட பலர் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். கதாநாயகியாக சோபிதா தலிபாலா நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. தற்போது நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் இறந்தார்.
அதாவது சூட்டிங் ஸ்பாட்டில் காரில் இருந்து ஸ்டண்ட் செய்யும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக மோகன்ராஜ் தவறி கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை படக்குழுவினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரை் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த மோகன் ராஜ்க்கு 52 வயது ஆகிறது. அவர் காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டம் செல்லியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தார். இவரது தந்தை பெயர் செல்வராஜ். இறந்த மோகன் ராஜ் ஸ்டண்ட் யூனியனின் பொறுப்பில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மோகன் ராஜ் குடும்பத்தினருக்கு தமிழ் திரையுலகத்தை சேர்ந்த நடிகர்கள், ஸ்டண்ட் யூனியனை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக புகழ்பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‛‛கார் ஜம்மிங் ஸ்டண்ட் சிறப்பாக செய்வோரில் மோகன் ராஜூம் ஒருவர். கார் ஸ்டண்ட்டின்போது இன்று இரந்துவிட்டார். எங்களின் ஸ்டண்ட் யூனியன் மற்றும் இந்தியன் திரைப்படத்துறை அவரை மிஸ் செய்யும்'' என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications