தாசில்தார் போட்ட ஸ்கெட்ச்.. நாகை சொகுசு காரில் எட்டிப்பார்த்த அரசு அதிகாரி.. மறு நொடியே பகீர்
சென்னை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரியும், போலீஸ்கார ஏட்டு ஒருவரும் லஞ்சம் வாங்கிய புகாரில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளே முறைகேட்டில் ஈடுபட்டது மாவட்ட நிர்வாகத்திடம் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அருந்தவபுலம் பகுதியில் கடந்த 22-ம் தேதி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

துணை தாசில்தார் அந்தஸ்தில் உள்ள பறக்கும் படை அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவில், தலைமை காவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்தச் சோதனையில், காரினுள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 மதுபாட்டில்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மதுபாட்டில்களைக் கைப்பற்றிய அதிகாரிகள், சட்டப்படி முழுவதையும் கணக்கில் காட்டியிருக்க வேண்டும். ஆனால், கைப்பற்றப்பட்ட 240 மதுபாட்டில்களில் வெறும் 20 பாட்டில்களை மட்டுமே ஆவணங்களில் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 220 மதுபாட்டில்களை வெளி நபர்களிடம் ரகசியமாக விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
நாகை எஸ்பி - ரகசிய தகவல்
இது ஒருபுறமிருக்க, பிடிபட்ட நபரிடம் இந்த விவகாரத்தை அமுக்க ரூ.30,000 லஞ்சமாகப் பெற்றுள்ளனர். முறையான நடவடிக்கை எடுக்காமல், பணத்தைப் பெற்றுக்கொண்டு அந்த காரையும், கடத்தல்காரர்களையும் தப்பிக்க விட்டதாகத் தெரிகிறது.
இந்த முறைகேடு குறித்து நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி சுஜித்குமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்ட எஸ்பி, தலைமை காவலர் வெங்கடேசனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில், மதுபாட்டில்களைக் குறைத்துக் காட்டியதும், லஞ்சம் வாங்கியதும் உறுதி செய்யப்பட்டது.
அதேபோல, தேர்தல் அலுவலர் கண்ணன் நடத்திய விசாரணையில், பறக்கும் படை அலுவலர் ரமேஷும் இந்த ஊழலில் சரிபாதி பங்கு வகித்தது அம்பலமானது.
கலெக்டர் மற்றும் எஸ்பி அதிரடி
விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, துணை தாசில்தாரும் பறக்கும் படை அலுவலருமான ரமேஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமல்ல, முறைகேட்டிற்குத் துணையாக இருந்த தலைமை காவலர் வெங்கடேசனை சஸ்பெண்ட் செய்து எஸ்பி சுஜித்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் நேரத்தில் நேர்மையாகப் பணியாற்ற வேண்டிய அதிகாரிகளே, கடத்தல்காரர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்ற சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதற்கு என்னதான் தீர்வு?
எனினும், நாளுக்கு நாள் சில அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கைதாவது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.. இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?
அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க, அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்குமான நேரடித் தொடர்பைக் குறைத்து அனைத்துச் சேவைகளையும் முழுமையாக ஆன்லைன் மயமாக்க வேண்டும்..
லஞ்சம் வாங்கி சிக்கியவர்களின் சொத்துகளை உடனடியாகப் பறிமுதல் செய்வதோடு, அவர்களைப் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கி ஓய்வூதியச் சலுகைகளை ரத்து செய்யும் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும்..
லஞ்ச ஒழிப்புத் துறை எவ்வித அரசியல் தலையீடுமின்றி தன்னிச்சையாகச் செயல்பட அதிகாரம் வழங்கப்படுவதும், "வேலை சீக்கிரம் முடியட்டும்" என்று லஞ்சம் கொடுப்பதைத் தவிர்க்கும் மனப்பக்குவம் மக்களிடையே ஏற்படுவதும் மட்டுமே இந்த ஊழல் சங்கிலியை வேரோடு அறுக்க நிரந்தர தீர்வாகும்..!!!














Click it and Unblock the Notifications