நாகை: வீடு புகுந்து நகையை திருடிய மர்ம கும்பல்.. கடைசியில் நடந்ததுதான் செம ட்விஸ்ட்!
நாகபட்டினம்: நாகை அருகே வீடு புகுந்து நகையை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் பிடித்தனர். அவரை கம்பத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர். நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்துள்ள கீழகாவாலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி. இவர் நேற்றிரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் உறங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவு இவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் 3 பேர் வீட்டின் பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பாத்திரங்களை அங்கிருந்து திருடியுள்ளனர்

தாலியை பறிக்க முயன்றனர்
மேலும் உறங்கிக்கொண்டிருந்த செந்தில்குமாரின் மனைவி சாந்தியின் கழுத்தில் இருந்த தாலியை பறிக்க முயன்றனர் அப்போது சுதாரித்துக் கொண்ட சாந்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சாந்தியின் வாயை துணியால் பொத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர்.

ஒருவன் சிக்கினான்
அப்போது சத்தம் கேட்டு சாந்தியின் குழந்தை கூச்சலிட்டுள்ளது. இதையடுத்து வாசலில் படுத்திருந்த செந்தில்குமார் ஓடி வந்து மர்மநபர்களை பிடிக்க முயன்றுள்ளார். அவரை தள்ளி விட்டுவிட்டு மூன்று பேரும் வயல் வெளியில் தலை தெறிக்க ஓடி தப்பி சென்றுள்ளனர். இந்த சத்தம் கேட்டு ஒன்று திரண்ட கிராம மக்கள் விரட்டிச் சென்று தேவூர் அருகே திருடர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் இருவர் தப்பிச்சென்ற நிலையில் ஒரு திருடன் மட்டும் கிராம மக்களிடம் சிக்கிக் கொண்டான்.

தர்ம அடி கொடுத்தனர்
அவனை கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள் விடிய, விடிய தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார் கிராம மக்களிடமிருந்து திருடனை மீட்டனர் . அவனிடமிருந்து தங்க நகைகள், பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசார் விசாரணை
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கிராம மக்களிடம் வசமாக சிக்கிக்கொண்ட திருடன் கீழ்வேளூர் அருகே உள்ள வடக்காலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தப்பிச் சென்ற இருவர் குறித்து போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications