நான் யார் தெரியுமா? என் பேரு தெரியுமா? மாணவனிடம் கேட்ட முதல்வர்.. பட்டென்று வந்த பதில்!
நாகப்பட்டினம்: முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திருக்குவளையில் உள்ள பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த போது தன்னுடன் அருகில் அமர்ந்து சாப்பிட்ட மாணவனிடம் நான் யார் தெரியுமா?என்னுடைய பெயர் தெரியுமா என்று கேட்டு பேசிக்கொண்டே சாப்பிட்டார்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி மறைந்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அன்று, 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக, 2023-24 நிதியாண்டில் ரூ.404.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த அரசாணையும் வெளியாகியிருந்தது.

முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 31,00 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பயின்ற தொடக்கப்பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களோடு அமர்ந்து சாப்பிட்டார்.
அப்போது மாணவர்களிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டார். உங்க பேர் என்ன என்ன படிக்கிறீங்க என்று கேட்டார். பின்னர் நான் யார் தெரியுமா என்று அருகில் அமர்ந்து சாப்பிட்ட பள்ளி மாணவியிடம் கேட்டார் முதல்வர் ஸ்டாலின். அதற்கு அந்த சிறுமியோ, முதலமைச்சர் என்று கூறினார். பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவனிடம் பேசிய முதல்வர் நான் யார் தெரியுமா? என்று கேட்க, அதற்கு அந்த சிறுவனோ, சிஎம் என்று கூறினார். என் பேரு தெரியுமா என்று மீண்டும் கேட்டதற்கு ஸ்டாலின் என்று பட்டென்று சொன்னான் அந்த மாணவன். அதற்கு முதல்வர் ஸ்டாலின் வெரிகுட் என்று கூறினார். சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் மாணவர்களிடம் அவர்களின் கல்வி, குடும்ப சூழல் பற்றி கேட்டு பேசிக்கொண்டே சாப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் , தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று பல திட்டங்களை செய்திருந்தாலும், காலை உணவு திட்டம் எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது என்று கூறினார். யாரும் பட்டினியோடு பள்ளிக்கு வரக்கூடாது என்று சொன்னார். படிப்புக்காகவும், வேலைக்காகவும் பேருந்தில் செல்லும் சகோதரிகள் கட்டணமில்லாமல் விடியல் பயணத்தை மேற்கொள்ளும் போதும், உயர் கல்வி பெரும் அரசு பள்ளி மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெறும் போதும் , அவர்களை விட எனக்கு தான் அதிகமான மகிழ்ச்சி. கல்வி கற்க எதுவும் தடையாக இருக்க கூடாது . காலை உணவு மிக மிக முக்கியம்; காலை உணவு இல்லை என்றால் எப்படி கல்வி கற்க முடியும் . பசியோடு வருபவர்களை பட்டினியாக வைத்து பாடம் சொல்லி கொடுக்ககூடாது என்பதற்காகவே இத்திட்டம் தொடங்கப்பட்டதாக கூறினார்.












Click it and Unblock the Notifications