ரத்தத்தால் சிவந்த கடல்.. 2 நாகை மீனவர்கள் நடுக்கடலில் கொலை! இரு கிராமத்தினரிடையே மோதலில் கொடூரம்
நாகை: நடுக்கடலில் இரு கிராம மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 2 மீனவர்கள் கொல்லப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களான அக்கரைப்பேட்டைக்கு கீச்சாங்குப்பத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. அக்கரைப்பேட்டையை சேர்ந்த சகோதரர்களான ஆத்மநாபன், சிவனே செல்வம், காலஸ்திநாதன் ஆகியோர் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் விசைப்படகில் மீன்பிடிக்க சென்று இருக்கிறார்கள். அக்கரைப்பேட்டை மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டு இருந்த வழியில் கீச்சாங்குப்பம் மீனவர்களின் படகு சென்று உள்ளது.

அப்போது அவர்களின் பைபர் படகில் மீன்பிடி வலை ஒன்று சிக்கி சேதம் அடைந்து இருக்கிறது. சேதமடைந்த மீன்பிடி வலை அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த மீனவர்களுக்கு சொந்தமானது. இது தொடர்பாக விசைப் படகில் சென்ற கீச்சாங்குப்பம் மீனவர்களிடம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் கேட்க இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஒருவர் மீது மற்றொருவர் சரிமாரி தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டனர். இந்த தாக்குதலில் மீனவர்கள் படுகாயமடைந்ததுடன், பைபர் படகும் சேதமடைந்தன.
தாக்குதலில் படுகாயம் அடைந்த மீனவர்கள் நாகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அக்கரைப்பேட்டை மீனவர்களான சிவனே செல்வம், காலஸ்திநாதன் ஆகிய சகோதர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இடது கையில் முறிவு ஏற்பட்டு நாகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஆத்மநாபனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 2 மீனவர்கள் கொல்லப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீனவர்கள் கொலை தொடர்பாக இதுவரை 8 பேரை காவல் துறை கைது செய்து இருக்கிறது. மீனவர்கள் மரணத்தை அடுத்து இரு மீனவ கிராமங்களிலும் பதற்றமான சூழ்நிலை தொடர்கிறது. பாதுகாப்புக்காக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீச்சாங்குப்பம் மற்றும் அக்கரைப்பேட்டை கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications