அன்னையே ஆரோக்கிய மாதாவே..வேளாங்கண்ணியில் ஆயிரக்கணக்கில் குவியும் பக்தர்கள்! ஆனால் ஒரு வருத்தம்..!
நாகப்பட்டினம்: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஆனால் பக்தர்கள் நலன் கருதி கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பேராலய திருவிழா நேற்று முன் தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வேளாங்கண்ணி கோவில் திருவிழா கொடியேற்றத்தை காண தூத்துக்குடி, மதுரை, சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இதனையடுத்து கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சிறப்பு திருப்பலிக்குப் பிறகு மாதா உருவம் பொறுத்தப்பட்ட கொடி மரத்தில் ஏற்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் "மரியே வாழ்க" என பக்தி முழக்கமிட்டு அன்னை மரியாளையும், குழந்தையும் இயேசுவையும் போற்றிப் புகழ்ந்தனர். தொடர்ந்து இரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. விழாவையொட்டி அன்னை வேளாங்கண்ணி ஆலையம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
தொடர்ந்து வான வேடிக்கையும், ட்ரம்ஸ் சிவமணியின் கச்சேரியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து குற்றச் செயல்களை தடுக்க பல்வேறு இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான சிலுவை பவனி செப்டம்பர் 6ஆம் தேதியும், அதற்கு அடுத்த நாள் அதாவது செப்டம்பர் 7ஆம் தேதி தேர் பவனியும் நடைபெறுகிறது.
வேளாங்கண்ணி திருவிழாவை ஒட்டி தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அதே நேரத்தில் வேளாங்கண்ணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தங்கும் விடுதிகளில் கட்டணம் அதிகளவு வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் திருவிழா தொடங்கியதிலிருந்து வேளாங்கண்ணி கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் கடலில் குளிப்பதை காவல்துறையினர் மற்றும் பிற துறை அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். திருவிழா காலங்களில் கடலில் பக்தர்கள் குளிப்பதால் உயிரிழப்புகள் மற்றும் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலேயே தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் வேளாங்கண்ணி மட்டுமல்லாது திருச்செந்தூர் வரையிலான கடல் பகுதிகளில் ஜெல்லி மீன்கள் அதிக அளவில் இருப்பதாகவும், இதனால் பக்தர்களுக்கு உடல் அரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே திருச்செந்தூர் கடல் பகுதியில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது வேளாங்கண்ணியிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வேளாங்கண்ணியில் ஜெல்லி மீன்கள் தொல்லை இல்லை என கூறப்படுகிறது. ஆனால் விஷப் பாம்பு தொல்லை இருப்பதாக கூறி பக்தர்களை அதிகாரிகள் அனுமதிப்பதில்லை என்ற குழப்பமான தகவலும் உலாவுகிறது.












Click it and Unblock the Notifications