மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு போக வேண்டிய நாகர்கோவில் புதுமண தம்பதி.. இப்ப ஜெயிலில் தான் விருந்து
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருவட்டார் அருகே தங்க நகை வாங்குவது போல் நடித்து கடையில் மோதிரம் திருடிய புதுமண தம்பதி சிசிடிவி கேமரா காட்சியால் சிக்கினார்கள். மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு போக வேண்டிய தம்பதி, கடைசியில் ஜெயிலுக்கு போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள முளவிளை பூவன்கோடு பகுதியை சேர்ந்த 50 வயதாகும் பரமசிவன் தொழில் அதிபர் ஆவார். பரமசிவன் பூவன்கோடு சந்திப்பில் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது நகை கடைக்கு கடந்த ஜூன் 10-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு மோட்டார் சைக்கிளில் புதுமணத்தம்பதியாக ஒரு ஆணும், பெண்ணும் பரமசிவனின் நகை கடைக்கு வந்துள்ளனர்.

புதுமணத்தம்பதி தங்களுக்கு 4 கிராம் மோதிரம் வேண்டும். அதில் விதவிதமான மாடலை காட்டுங்கள் என கூறியுள்ளார்கள். அரை மணி நேரமாக ஒவ்வொரு மாடலையும் புரட்டி, புரட்டி பார்த்த இருவரும் திருப்தி இல்லை என கூறிவிட்டு கிளம்பி சென்றுவிட்டனர்
அன்று இரவு நகை கடை உரிமையாளர் பரமசிவன் கடையை பூட்டும்போது நகைகள் மற்றும் மோதிரத்தை கணக்கெடுத்தார். அப்போது 2 கிராம் எடை கொண்ட 2 மோதிரங்கள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 2 மோதிரங்களை புதுமணத்தம்பதி எடுத்துச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கடைக்கு வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் ஆண், பெண்ணின் உருவம் தெளிவாக தெரியாத நிலை இருந்தது. எனினும் அந்த பகுதியில் உள்ள கேமராவை ஆய்வு செய்தபோது ஆணும், பெண்ணும் சென்ற இருசக்கர வாகனத்தின் பதிவெண் தெளிவாக தெரிந்தது. அதன் மூலம் இருவரையும் பிடிக்க போலீசார் முடிவு செய்தார்கள்.
இதற்கிடையே கண்காணிப்பு கேமராவில் பதிவான வாகன பதிவெண் உடைய இருசக்கர வாகனம் கன்னியாகுமரியில் உள்ள விடுதி முன்பு நின்றுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.பின்னர் அந்த இருசக்கர வாகனத்தை கைப்பற்றியதோடு அதில் வந்த ஆண், பெண்ணை பற்றி விசாரித்ததில் அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியது தெரியவந்தது.
உடனே போலீசார் அந்த அறைக்குள் அதிரடியாக நுழைந்து இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்தார்கள். இதில் நகை வாங்குவது போல் நடித்து மோதிரத்தை திருடியவர்கள் திருவிதாங்கோடு கேரளபுரத்தைச் சேர்ந்த இர்ஷாத் (23), அவரது மனைவி அனிஷா என்ற இர்பானா (21) என்பதும், இவர்கள் புதுமணத்தம்பதி என்பதும் தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இர்ஷாத், அனிஷாவை கைது செய்தார்கள்.












Click it and Unblock the Notifications