பெரிய கவுரவம்.. ராஜீவ் நினைவிடம் என்பதால் ‛ஓகே’ சொன்னேன்.. இசை அஞ்சலி பற்றி வீணை காயத்ரி உருக்கம்
நாகர்கோவில்: பாரத் ஜோடோ யாத்திரைக்கு முன்பாக ராகுல்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் வழிபாடு செய்தார். அப்போது வீணை காயத்ரி கூறுகையில், ‛‛நான் கச்சேரி செய்வதை நிறுத்திவிட்டேன். ராஜீவ் காந்தியின் நினைவிடம் என்பதால் தான் ஒப்புக்கொண்டேன்'' என கூறியுள்ளார்.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை நிலைநாட்ட அக்கட்சி தொடர் ஆலோசனை நடத்தி வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் கட்சியை பலப்படுத்தும் பணியில் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது.
இதன் ஒருபகுதியாக தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ யாத்ரா'என்ற இந்திய ஒற்றுமை நடைபயணம் துவங்க உள்ளது. இந்த நடைப்பயணம் கன்னியாகுமரியில் துவங்கி பல்வேறு மாநிலங்களை கடந்து காஷ்மீரை சென்றடைகிறது.

ராஜீவ் நினைவிடத்தில் ராகுல் மரியாதை
இதற்காக ராகுல்காந்தி நேற்று தமிழ்நாட்டுக்கு வந்தார். இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு 19 ஆண்டுகளுக்கு பிறகு சென்றார். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் ராகுல்காந்தி மலர்தூவி வணங்கினார். 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு சிறிது நேரம் அங்கு அமர்ந்து அமைதியாக தியானம் செய்தார்.

இசை அஞ்சலி
அதன்பிறகு ராகுல்காந்தி அரசமரக்கன்று நட்டார். இந்த நிகழ்ச்சியில் ராஜீவ் காந்திக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. வீணை காயத்ரி வீணை மூலம் இசை மீட்டி இசை அஞ்சலி செலுத்தினார். வீணை காயத்ரிக்கு , ராகுல்காந்தி நன்றி தெரிவித்தார். இந்நிலையில் ராஜீவ் நினைவிடத்தில் இசை அஞ்சலி செலுத்தியது பற்றி வீணை காயத்ரி மனம் திறந்து கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

ராஜீவ் நினைவிடம் என்பதால்...
‛‛நான் இப்போது எங்கும் கச்சேரி செய்வது இல்லை. கச்சேரி செய்வதை நிறுத்திவிட்டேன். ராஜீவ் காந்தி நினைவிடம் என்றதும் ஒப்புக்கொண்டேன். ஏனென்றால் இது சாதாரணமான இடம் இல்லை. இது அனைவருக்கும் தெரியும். துயரமான சம்பவம் நடந்தபோது முழு இந்தியா, நாங்கள் அனைவரும் கஷ்டப்பட்டோம். ராகுல்காந்தி பாதயாத்திரை துவங்குவதற்கு முன்பு இங்கு வந்து வணங்க உள்ளதாக கூறினார்கள். இதில் பங்கேற்றது பெரிய கவுரவமாக கருதுகிறேன்'' என்றார்.

யார் இந்த வீணை காயத்ரி?
வீணை காயத்ரி ஈச்சம்பட்டி காயத்ரி என அழைக்கப்படுகிறார். பிரபல வீணை கலைஞரான இவரது தந்தை அஸ்வத்தாமா தெலுங்கு பட இசையமைப்பாளர் ஆவார். இவரது தாய் கமலா வீணை கலைஙர் ஆவார். வீணையை முறைப்படி கற்ற இவர் ஏராளமான கச்சேரிகளை நிகழ்ச்சினார். தமிழக அரசின் கலைமாமணி உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக வீணை காயத்ரி பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications