3 ஆண்டு வீட்டு சிறை! பேச்சு திறனை இழந்த மகன்கள்.. அதீத பாசத்தால் தாய் செய்த பயங்கரம்! அலறிய குமரி
நாகர்கோவில்: கொரோனா அச்சம் காரணமாக தனது மூன்று மகன்களை மூன்று ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே தாய் ஒருவர் அடைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மகன்களுக்கு பேச்சு திறன் நின்று போயிருக்கிறது.
2019ம் ஆண்டு முதன் முதலில் சீனாவில் அடையாளம் காணப்பட கொரோனா தொற்றானது மெள்ள மெள்ள உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கோடிக்கணக்கில் பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டன. இந்நிலையில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனாலும், இந்தியாவின் சில நகரங்களில் கொரோனா தொற்றுக்கு பயந்து 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் என மக்கள் வீட்டை விட்டே வெளியே வராமல் முடங்கி கிடந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
இது போன்ற எல்லாம் வட மாநிலங்களில்தான் நடந்து வந்தன. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவம் ஒன்று அரங்கேறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில்தான் இச்சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இரணியல் பகுதியில் முருகன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். கொரோனா தொற்றுக்கு முன்பு வரை முருகன், முருகனின் மனைவி ஆகியோரை அக்கம் பக்கத்தினர் பார்த்திருக்கின்றனர்.

கொரோனா அச்சம்
ஆனால், கொரோனா தொற்றுக்கு பின்னர் முருகன் கேரளாவுக்கு வேலைக்கு சென்றிருக்கிறார். வேலைக்கு சென்ற நபர் நீண்ட நாட்களாக திரும்பி வரவில்லை. அதேபோல முருகனின் மனைவியும், பிள்ளைகளும் கூட வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. வீட்டிற்குள் டிவி ஓடும் சத்தம், அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் சத்தம் மட்டும் கேட்டியிருக்கிறது. எனவே வீட்டில் ஆட்கள் இருக்கிறார்கள் என அக்கம் பக்கத்தினரும் உறுதி செய்துள்ளனர். இப்படி இருக்கையில்தான் வீட்டிற்கு வரி கட்டாமல் இருந்ததால் நகராட்சி ஊழியர் இவர்களின் வீட்டை தேடி வந்துள்ளார். வீட்டின் கதவை தட்டியபோது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருக்கிறது. உள்ளே டிவி சத்தம் கேட்டிருக்கிறது.

சந்தேகம்
ஆனாலும் கதவை யாரும் திறக்கவில்லை. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் அக்கம் பக்கத்து வீடுகளில் இவர் விசாரித்திருக்கிறார். அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அதாவது, கொரோனா தொற்றுக்கு பயந்து முருகனின் மனைவி தனது 3 மகன்களுடன் வீட்டிற்குள்ளேயே இருந்திருக்கிறார். அட கொரோனா எல்லாம்தான் போயாச்சே அப்புறம் ஏன் கதவை திறக்கவில்லை? என்கிற கேள்விக்கு பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பதில் இல்லை. எனவே வேறு வழியின்றி அந்த ஊழியரை நீண்ட நேரம் கதவை தட்டி பார்த்திருக்கிறார். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை. இதனையடுத்து அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மீட்பு
காவல் துறையினர் குழந்தைகள் நலத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்று கதவை தட்டியுள்ளனர். ஆனாலும் யாரும் கதவை திறக்கவில்லை. பின்னர் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு கதவு திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மூன்று மகன்களில் இருவருக்கு பேசும் வழக்கு முற்றிலுமாக மறந்துவிட்டிருக்கிறது. எனவே அவர்களால் பேச முடியவில்லை. முதல் மகன் மட்டும் அதிகாரிகளிடம் நடந்த சம்பவத்தை விளக்கியுள்ளார். ஆனாலும் அவருக்கும் அந்த சம்பவங்களை கோர்வையாக விளக்கி கூற முடியவில்லை.

கொரோனா அச்சம்
இதனையடுத்து மூவரையும் அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தாயிடம் விசாரிக்கையில், கொரோனா அச்சம் காரணமாகவே மூவரையும் வீட்டிற்குள் அடைத்து வைத்திருந்ததாக கூறியுள்ளார். இதில் கொடுமை என்னவெனில் முதல் மகன் கல்லூரி படித்து வந்திருக்கிறார். ஆனால் கல்லூரி படிப்பையும் தாய் நிறுத்திவிட்டு அவர்களை வீட்டோடு இருக்க வைத்திருக்கிறார். இதனால் மகன்கள் மூவரின் மன நிலையும் மோசமடைந்திருக்கிறது. இதனையடுத்து தாய்க்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர். பின்னர் அவர் தனது மகன்களை பள்ளி கல்லூரிக்கு அனுப்புவதாக உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications