தொடர் மழை.. நாகை, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர்கள் அறிவிப்பு
சென்னை: தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் மழை காரணமாக 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக - வடஇலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன் படி நாகையில் சனிக்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழ் வேளூர், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சில இடங்களில் அதிகமாகவும் சில இடங்களில் குறைவாகவும் மழை பெய்தது.
மழையால் நாகை வீதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நாள் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த வானிலை நிலவி வந்தது. கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் தணிந்து மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கு 1 முதல் 9ஆம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்தார் அருண் தம்புராஜ். காரைக்காலிலும் கனமழையை தொடர்ந்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications