கன்னியாகுமரி போறீங்களா மக்களே.. இதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே
நாகர்கோவில்: பள்ளி கல்லூரிகளுக்கு கோடைக்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதியில் மக்கள் குவிய தொடங்கியுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி போன்ற இடங்களும் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாகும். ஆனால் கன்னியாகுமரிக்கு சென்றால் சில குறிப்பிட்ட இடங்களை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
இந்தியாவின் தென் முனையில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டின் மற்ற எல்லா மாவட்டங்களைவிட சிறப்பு மிக்கதாகும். மற்ற மாவட்டங்களில் பேசும் மொழிகள் ஒரு சில வார்த்தைகள்தான் புரியாமல் இருக்கும். ஆனால் மேற்கு கன்னியாகுமரியில் பேசும் தமிழ் மொழியானது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இந்த மாவட்டத்தில் 14க்கும் அதிகமான வித்தியாசமான பேச்சு வழக்கு மொழிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது இந்த மாவட்டத்தின் தனிச்சிறப்புமிக்க அடையாளமாகும்.
எல்லோருக்கும் கன்னியாகுமரி என்றால் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, காந்தி மண்டபம் மட்டும்தான் நினைவுக்கு வரும். ஆனால் இந்த மாவட்டத்தில் உள்ள சிறப்புமிக்க இடங்களை சுற்றி பார்க்க நிச்சயம் ஒருநாள் போதாது. இங்குள்ள கடற்கரைகளை மட்டும் ரசிக்க இரண்டு நாட்கள் ஆகும். முதலில் உள்ளது முட்டம் கடற்கரை. கன்னியாகுமரியிலிருந்து 32 கி.மீ தொலைவிலும் தலைநகர் நாகர்கோவிலிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் இந்த முட்டம் பீச் அமைந்திருக்கிறது.

மற்ற கடற்கரைகளில் பாறைகள் இருந்தாலும் இங்குள்ள பாறைகள் அளவில் பெரியவை. இந்த பாறைகள் மீது பட்டு தெறிக்கும் அலையின் நீர் துளிகளில் 'கொடியிலே மல்லிகைப்பூ' பாடல் வரிகள் நிச்சயம் எதிரொலிக்கும். அடுத்து உள்ளது சொத்தவிளை கடற்கரை. இது கன்னியாகுமரியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. அதேபோல தேங்காய்பட்டினம் கடற்கரையும் கன்னியாகுமரியில் நிச்சயம் சுற்றி பார்க்க வேண்டிய இடமாகும். இந்த கடற்கரையில் மீன்பிடி துறைமுகம் அமைந்திருக்கிறது. இதேபோல தெக்குறிச்சி, சங்குத்துறை ஆகிய கடற்கரைகளும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடமாகும்.
அடுத்து பார்க்க வேண்டிய முக்கியமான இடம் மாத்தூர் தொட்டி பாலம். ஒரு காலத்தில் விளவங்கோடு மற்றும் கல்குளம் போன்ற பகுதிகளில் விவசாயம் செழித்திருந்தது. ஆனால் பருவமழை பொய்த்ததால் அடிக்கடி தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. எனவே பெரும்பாலான விவசாயிகள் அரசிடம் முறையிட்டனர். இதனால் 1966ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் இந்த தொங்கு தண்ணீர் தொட்டியை உருவாக்கினார். அதாவது 28 தூண்களுடன் 115 உயரம் கொண்ட இந்த பாலம் மலையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தண்ணீரை கொண்டு செல்கிறது. இதன் மூலம் விவசாயம் மீண்டும் செழிக்க தொடங்கியது.
தற்போது இந்த பாலம் சிறந்த சுற்றுலா தலமாக இருக்கிறது. காலை 6.30 மணிமுதல் மாலை 6.30 மணிவரை இந்த பாலத்தை சுற்றி பார்க்க அனுமதி இருக்கிறது. இதனையடுத்து சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய இடம் திற்பறப்பு அருவி. கன்னியாகுமரியை பொறுத்த அளவில் இது ஒரு 'சின்ன குற்றாலம்'. கோதையாறு நதியிலிருந்து கடலை நோக்கி பாயும் நீர் திற்பரப்பு எனும் இடத்தில் சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து செல்கிறது. இது பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும். கமல்ஹாசன் திரைப்படம் முதல் பல்வேறு திரைப்படங்கள் இந்த இடத்தில் படமாக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு நீச்சல் குளமும், படகு சவாரி செய்யும் வசதியும் இருக்கிறது.

அதேபோல இங்கு ஒரு சிவன் கோயிலும் இருக்கிறது. 9ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிவன் கோயில் 12 சில தலங்களில் ஒன்றாகும். இதேபோல மிகவும் பிரசத்தி பெற்ற இடம்தான் சிதறால் மலைக்கோயில். தமிழ்நாட்டில் சமண மதம் அளப்பரிய பங்காற்றியுள்ளது. அப்படிபட்ட சமண துறவிகள் தங்கிய இடம்தான் இந்த சிதறால் மலை கோயில். மார்த்தாண்டத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள இந்த சிதறால் மலைகோயில் ஏராளமான சமண சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.
9ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோயிலில் சமண பள்ளி செயல்பட்டு வந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. மனிதர்களில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்பதுதான் சமண மதத்தின் அடிப்படை. அதேபோலதான் இந்த சிதறால் மலை கோயிலிலிருந்து நீங்கள் உலகை பார்த்தால் மிகவும் ரம்மியமாக இருக்கும். இப்படி அழகான உலகில் எதற்காக நாம் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம் என்று நமக்கே கேட்க தோன்றும். எனவே கன்னியாகுமரி செல்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டி இடம் இந்த மலைக்கோயில்.
அதேபோல மற்றொரு சிறப்புமிக்க இடம் பத்மநாபபுரம் அரண்மனை. திருவாங்கூரை ஆண்ட இறவி வா்மா குலசேகரபெருமாள் என்ற மன்னரால் கி.பி. 1601 ல் கட்டப்பட்டது. சினிமாக்களில் காட்டப்படுவதை போல அரண்மனைகள் பிரமாண்டவையா? என்று உங்களுக்கு கேள்வி இருந்தால் அந்த சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள இங்கு வரலாம். மலையடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள இந்த அரண்மனை தக்கலையிலிருந்து வெறும் 2 கி.மீ தொலைவில்தான் இருக்கிறது. இது தவிர காமராஜர் மண்டபம், பேச்சிப்பாறை , பெருஞ்சாணி அணை போன்ற இடங்களும் சுற்றி பார்க்க வேண்டிய மிக முக்கியமான இடமாகும்.












Click it and Unblock the Notifications