அக்னிபாத் திட்டம்.. இளைஞர்கள் வாழ்வில் மாற்றத்தை அளிக்கும்.. அண்ணாமலை பெருமிதம்!
நாமக்கல்: அக்னிபாத் திட்டம் இளைஞர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்திய இளைஞர்களுக்கு ராணுவத்தில் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய ராணுவ ஆட்சேர்ப்புக் கொள்கையாக அக்னிபாத் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படும் இளைஞர்கள், 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள். அதன்பின்னர் 25 சதவிகித இளைஞர்களுக்கு மட்டுமே 15 ஆண்டுகள் வரை பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். மீதமுள்ள 75 சதவிகிதம் பேர் ஓய்வூதியமின்றி வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.

மத்திய அரசு உறுதி
அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. வட இந்திய மாநிலங்களில் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களிலும் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டன. இருந்தும், மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற முடியாது என்று அறிவித்தது.

பயிற்சி முகாம்
இதனைத்தொடர்ந்து அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப் படை மற்றும் கப்பற்படையில் சேர்வதற்கான ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்தநிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மசக்காளிப்பட்டியில் பாஜக முன்னாள் ராணுவப் பிரிவு சார்பில் அக்னிபாத் திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

அண்ணாமலை பேச்சு
இதனை முகாமை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். இந்த பயிற்சி முகாமில் பேசிய அண்ணாமலை, மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னிபாத் திட்டம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. விமானப்படைக்கு மட்டும் இதுவரை 7.50 லட்சம் விண்ணப்பங்களை இளைஞர்கள் அனுப்பியுள்ளனர்.

இட ஒதுக்கீடு பற்றி பேசு
இத்திட்டம் நாட்டின் முன்னேற்றத்துக்கும் இளைஞர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என இளைஞர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இத்திட்டத்தில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னி வீரர்களாக 4 ஆண்டுகள் பணியில் இருப்பர். அதற்குப் பிறகு 25 சதவிகிதம் பேர் தொடர்ந்து அப்பணியில் இருக்க முடியும். மீதமுள்ள 75 சதவிகிதம் புதிய தொழில்கள் தொடங்கலாம். அதற்கான ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
அக்னி வீரர்களாக இருக்கும் போதே அவர்களுக்கு மேல்நிலைப் பள்ளி கல்வி, உயர்கல்வி, பட்டப்படிப்பு வாய்ப்புகள் வழங்கப்படும். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு சிஆர்பிஎப், காவல்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications