ஒரு கிலோ சிக்கன் ரூ.400 அபாயம்.. கோழி வளர்ப்புக் கூலி உயருமா? கறிக்கோழி விலையில் அரசு தீர்வு காணுமா
நாமக்கல்: கோழி வளர்ப்பு கூலி உயர்வு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது என அறிவித்ததன் விளைவாக, தமிழகத்தில் கறிக்கோழி உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை கட்டுப்பாட்டை இழந்துள்ளது. விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்த சூழலில், இன்றைய தினம் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அரசு நல்ல முடிவை சொல்ல வேண்டும் என்ற கோரிக்கையை கோழிப்பண்ணையாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்..
தமிழகத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நாமக்கல், பல்லடம், திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகள் கறிக்கோழி உற்பத்தியில் முக்கிய பகுதிகளாக உள்ளன. தேசிய அளவிலும் நாமக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில், கறிக்கோழி நிறுவனங்கள், கோழிக்குஞ்சு, தீவனம், மருந்து உள்ளிட்டவற்றை வழங்கி, 38 முதல் 45 நாட்களில் 2 கிலோவுக்கு மேல் எடையுள்ள கறிக்கோழியாக வளர்த்து தர, விவசாய பண்ணைகளுக்கு ஒப்படைக்கின்றன. இதற்காக தற்போது கிலோவுக்கு ரூ.6.10 முதல் ரூ.6.50 வரை மட்டுமே வளர்ப்பு கூலி வழங்கப்படுகிறது.
கறிக்கோழி விலை உயர்வு
இந்த கூலியை ரூ.20 ஆக உயர்த்த வேண்டும் என்றும், ஆண்டுதோறும் அரசு, கறிக்கோழி நிறுவனங்கள் மற்றும் கோழி வளர்ப்பு விவசாயிகள் பங்கேற்கும் முத்தரப்பு கூட்டம் நடத்தி, கூலி நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 1ம் தேதி முதல் கோழி வளர்ப்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்... இப்படிப்பட்ட சூழலில் சென்னையில் கால்நடைத் துறை அதிகாரிகள் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.
ஆனால், "இந்த பிரச்னையை கோழி நிறுவனங்களும், விவசாயிகளும் பேசி முடிவு செய்து கொள்ள வேண்டும். அரசு இதில் தலையிட முடியாது" என்று கால்நடைத் துறை செயலர் சுப்பையன் கூறிவிட்டதால், பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இதன் எதிரொலியாக கறிக்கோழி உற்பத்தி குறைந்து, விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. பொதுமக்கள், ஹோட்டல்கள், சிற்றுண்டிச் சாலைகள் உள்ளிட்ட பல துறைகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.
கிலோ சிக்கன் ரூ.400
சில நாட்களுக்கு முன்பு சில்லறை சந்தையில் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி, தற்போது ரூ.360 வரை உயர்ந்துள்ளது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் விலை ரூ.400ஐ கூட எட்டும் அபாயம் இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தகவல் தொழில்நுட்ப மாநில செயலர் கோபாலகிருஷ்ணன் இதுகுறித்து சொல்லும்போது, "4 ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்குஞ்சு விலை ரூ.20 ஆக இருந்தது. தற்போது அது ரூ.40க்கு மேல் உயர்ந்துள்ளது. மின் கட்டணம், தேங்காய் நார், பராமரிப்பு செலவுகள் எல்லாம் அதிகரித்துள்ளன. ஆனால் வளர்ப்பு கூலி உயர்த்தப்படவில்லை. முத்தரப்பு கூட்டம் நடத்தி அரசிதழில் விலை நிர்ணயம் செய்தால் ஆண்டுதோறும் கூலி உயர்வு கிடைக்கும்" என்றார்.
கறிக்கோழி விலை
இதற்கு மாறாக, கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டி செயலர் சுவாதி கண்ணன், "விவசாயிகளுக்கு கூலி உயர்த்தப்படவில்லை என்பது பொய். தற்போது கிலோவுக்கு ரூ.10 வரை வழங்கப்படுகிறது. பிரச்னை விரைவில் சுமூகமாக முடியும்" என்றார்.
திண்டுக்கல்லில் பேசிய தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெருமாள், "40 ஆயிரம் பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடி பட்டுவாடா, தரமான குஞ்சுகள், இன்சூரன்ஸ், இலவச மின்சாரம், வங்கி கடன் வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அரசு, பண்ணையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு" என்றார்.
இன்று தீர்வு கிடைக்குமா?
ஆக மொத்தம், இந்த விலை உயர்வு காரணமாக, பல குடும்பங்கள் கறிக்கோழி வாங்குவதை குறைத்துள்ளன. இதன் விளைவாக முட்டை, மீன் மற்றும் காய்கறிகளின் தேவை அதிகரித்து வருகிறது. இன்றைய தினம் முத்தரப்பு பேச்சுவார்த்தை இந்த பிரச்னைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications