பெண்களை பாதுகாக்க உள்ளக குழு அமைக்காத அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு நாமக்கல் கலெக்டர் வார்னிங்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்க உள்ளக குழு அமைக்காத அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பொதுவாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தடுப்பதற்காக, அனைத்து நிறுவனங்களும் தனியாக ஐந்து பேர் கொண்ட உள்ளக குழு அமைக்க வேண்டியது அவசியம் ஆகும். அப்படி அமைக்காத நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முடியும்..

இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட ஆண் அல்லது பெண்கள் பணிபுரியும் பணியாளர்கள் உள்ள அனைத்து பணியிடங்களிலும் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் உள்ளக குழு அமைக்கப்பட வேண்டும்.
அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கூட்டுறவுதுறை சார்ந்த சங்கம், நிறுவனங்கள், கிராம ஊராட்சிகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வங்கிகள், போலீஸ் நிலையங்கள், விடுதிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள், பயிற்சி நிறுவனங்கள், நிதிநிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள இடங்களில் 5 நபர்கொண்ட உள்ளக குழு மற்றும் புகார் பெட்டியும் அமைக்கப்பட வேண்டும்.
அந்த குழுவில் 50 சதவீத பெண்கள் இடம்பெற வேண்டும். உள்ளக குழு அமைக்காத அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் குழு அமைக்கப்பட்ட உடன் உறுப்பினர்களின் விவரங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தின் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு கலெக்டர் உமா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications