வேட்பாளராவதற்கு முன்பே இவ்வளவு அட்ராசிட்டியா.. தவெக அருண்ராஜ் மீது புகார் அடுக்கும் அதிகாரிகள்
நாமக்கல்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுகவை தீவிரமாக எதிர்த்து தவெக அரசியல் செய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் தவெக கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான அருண்ராஜ் முன்னாள் ஐஆர்எஸ் என்பதால் நாமக்கல் திருச்செங்கோடு தொகுதியில், அதிகாரிகளை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட போவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் அந்தப் பகுதியில் அதிகம் வலம் வரத்தொடங்கியுள்ளனர். இந்நிலையில் திருச்செங்கோடு அருகே உள்ள சானார்பாளையம் பகுதியில் நேற்று கட்சியினருடன் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த சாக்கடை பிரச்சனையை மக்கள் சொல்லியுள்ளனர்.

மக்கள் புகார்
அந்தப் பகுதி மக்கள் அருண்ராஜிடம், "25 வருஷமா இந்த சாக்கடை பிரச்சனையால் கஷ்டப்படுறோம். முழுக்க முழுக்க கழிவு தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த வாரம் ஒருத்தவர் இதில் விழுந்தார். இதில் தற்போதுவரை 4 பேர் விழுந்துள்ளனர். குழந்தைகளை வைத்துக் கொண்டு ஜீரணிக்க முடியாத நிலையில் தவிக்கிறோம். சாலைக்கு போகும் தண்ணீர் இங்கேயே நிற்கிறது. இதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை" என்றனர்.
அதற்கு அருண்ராஜ் கட்சி நிர்வாகியிடம், "நகராட்சியில் யார் இருக்காங்க. கால் பண்ணுங்க என்றார். சிறிது நேரத்தில் அங்கு நகராட்சி அலுவலர் ஒருவர் அவர் வந்தார். அவரிடம் ஆரம்பத்தில் இருந்தே அருண்ராஜ் அதிகார தொனியில் பேசினார். சார் உங்க பேர் என்ன. நீங்க தான் சானிட்டரி இன்ஸ்பெக்டரா. இங்கு என்ன நடக்கிறது என்று தெரியுமா இல்லையா. கடைசியா இந்தப் பகுதிக்கு எப்ப வந்தீங்க. இது நம்ம வேலைங்க. இதுக்கு மக்கள் போராட்டம் பண்ணணுமா.
அதிகாரியிடம் கேள்வி
இங்க அடிக்கடி வரீங்களா. சாக்கடை எல்லாம் சுத்தமா இருக்கிறதா. தினமும் சுத்தம் செய்கிறீர்களா. இதை சுத்தம் செய்தால் போய்விடுமா. இதை யார் கட்டினார்கள். இன்ஜினியர் யார். அவருக்கு போன் செய்யுங்கள் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். மேலும், இந்த சாக்கடை 15 அடி ஆழத்தில் உள்ளது. உடனே சுத்தம் செய்யுங்கள். இனிமேல் கழிவு நீர் தேங்காதளவுக்கு நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட்டார்.
அதற்கு அந்த அதிகாரி, தினமும் சுத்தம் செய்கிறோம். புகாரளித்தால் உடனே நடவடிக்கை எடுப்போம் என்றார். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ள அருண்ராஜ், "மக்களை பாதிக்கும் அனைத்து விஷயங்களுக்கும் தவெக முதல் கட்சியாக குரல் கொடுத்து வருகிறது.
அருண்ராஜ் விளக்கம்
இன்றைக்கு கூட நீண்ட காலமாக சாக்கடை தேங்குவது குறித்து குரல் கொடுத்தோம். தவறு செய்ததற்காக கேள்வி எழுப்பினாலே குற்றமாகிவிடுமா. திமுக அரசு தான் அதிகாரிகளை வைத்து எங்களை மிரட்டுகிறார்கள். நாங்கள் அனுமதி வாங்கி பேனர் வைத்தாலும் உடனே கிழித்து மிரட்டுகிறார்கள்" என்றார். அப்போது செய்தியாளர் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே முன்னாள் ஐஆர்எஸ் என்பதால் அதிகாரிகளை மிரட்டுவதாக மக்கள் புகார் கூறுகிறார்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அருண்ராஜ்," திமுக தான் எங்களைப் பார்த்து அச்சப்படுகிறது. மக்கள் முன்னிலையில் அதிகாரிகளிடம் மரியாதையாகத்தான் பேசினோம். நீண்ட காலமாக சரி செய்யப்படாததால் மக்கள் கோபத்தில் உள்ளனர். அவர்கள் போராட்டம் நடத்துகிறோம் என்றனர். நான் தான் பொறுமையாக இருங்கள். பேசுகிறோம் என கூறினேன். அதிகாரம் என்பது பொறுப்பு தானே தவிர அது பதவி இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications