நெஞ்சே பதறுதே.. ஒரே ஒரு நொடி தான்! தீக்குண்டத்தில் கைக் குழந்தையுடன் விழுந்த பக்தர்.. பதறிய மக்கள்!
நாமக்கல்: தீ மிதிக்கும்போது 6 மாத குழந்தையுடன் தவறி விழுந்த தந்தையின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக இருவரும் அக்னி குண்டத்திற்கு வெளியே விழுந்ததால் உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் உள்ள அக்னி மாரியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழாவின் போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், பலரும் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் விழாவின் ஒரு பகுதியாக இன்று கோவில் வளாகப் பகுதியில் குண்டம் இறங்கும் திருவிழா நடைபெற்றது.

இதில் நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள். சிறுவர். சிறுமியர். இளம் பெண்கள் இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் தீ மிதி திருவிழாவில் பங்கேற்று தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இந்த நிலையில் ஆவரங்காடு பகுதியை சேர்ந்த குமார் என்ற பக்தர் தனது ஆறு மாத பெண் குழந்தையுடன் தீ மிதிப்பதற்காக வந்தார். அப்போது அக்னி குண்டத்தில் நடந்து செல்லும் போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அக்னி குண்டத்தில் மிக அருகிலேயே தன் குழந்தையுடன் கால் தடுமாறி கீழே விழுந்தார். சுற்றி இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து பயத்தில் கூச்சலிட்டனர்.

இதனையடுத்து அங்கிருந்த கோவில் ஊழியர்கள் உடனடியாக குழந்தையையும், பக்தர் குமாரையும் பத்திரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் அக்னி குண்டத்தின் வெளியே இருவரும் விழுந்தததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக கோவில் வளாகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பக்தர் குமார் தனது குழந்தையுடன் தீக்குண்டத்தில் விழுந்த காட்சிகளும் அவரை மீட்ட காட்சிகளும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பக்தி தேவை தான் அதே நேரத்தில் ஆறு மாத குழந்தையை வைத்துக் கொண்டு தீக்குண்டத்தில் இறங்குவது போன்ற விபரீத செயல்களில் ஈடுபடக் கூடாது என ஒருபுறம் விமர்சனமும் எழுந்திருக்கிறது.
மறுபுறம் தீக் குண்டத்தில் விழுந்தாலும் குழந்தையை அம்மன் தான் காப்பாற்றினார். அதனால்தான் அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என ஒரு தரப்பினரும் கருத்து கூறி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications