ஒரு நொடிதான்.. கண்டக்டர் கத்தினார்.. எதிர் திசை ரோட்டை பார்த்தேன்: என்ன நடந்தது என விளக்கிய டிரைவர்!
நாமக்கல்: திடீரென சைக்கிள்காரர் ஒருவர் குறுக்கே வந்த நிலையில் நொடியில் சுதாரித்து, பேருந்தை திருப்பி உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநருக்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பாராட்டு விழா நடத்தினர். விபத்து நேர இருந்த தருணம் குறித்து ஓட்டுநரும், நடத்துநரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஈரோட்டில் இருந்து விழுப்புரம் செல்லும் வழியில் நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது பக்கவாட்டு சாலையில் இருந்து சைக்கிளில் வந்த நபர் ஒருவர் பேருந்து வருவதை கவனிக்காமல் திடீரென சாலையின் குறுக்கே வந்தார். இதனை பார்த்ததும் நடத்துநர் சத்தம் போடவே, சுதாரித்த அரசுப் பேருந்து ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை உடனடியாக சாலையின் எதிர் திசையில் திருப்பி சைக்கிள் மீது மோதாமல் தவிர்த்தார்.

டிரைவரின் சமயோசித செயல்: அரசுப் பேருந்து ஓட்டுநரின் சாதுர்யமான செயலால் சைக்கிளில் வந்த நபர் உயிர் தப்பியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி பதிவு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திடீரென சைக்கிள் குறுக்கே வந்த நிலையில், எதிர் சாலையில் பேருந்தை திருப்பி, உயிர் பலியை தவிர்த்தார் ஓட்டுநர். ஆனால், அந்த நேரத்தில் எதிர் திசையில் வாகனம் வந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும்.
எதிர் திசையில் வாகனம் வருகிறதா எனப் பார்த்தபிறகே, நொடி நேரத்தில் சமயோஜிதமாக முடிவெடுத்து எதிர் திசையில் வண்டியை விட்டுள்ளார் ஓட்டுநர். பயணிகளின் உயிர்களையும், குறுக்கே வந்த சைக்கிள் காரரின் உயிரையும் காப்பாற்றிய ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், சமயோசிதமாக செயல்பட்டு விபத்தைத் தவிர்த்த ஓட்டுநருக்கும், நடத்துனருக்கும் இன்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து, சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

கண்டக்டர் சத்தம் போட்டார்: இந்நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக பேட்டி அளித்துள்ள ஓட்டுநர் பூபதி, "ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வெப்படை தாண்டி 1 கி.மீ தொலைவில் சென்று கொண்டிருந்தபோது பக்கவாட்டு சாலையில் இருந்து சைக்கிள்காரர் ஒருவர், கவனிக்காமல் நேராக உள்ளே புகுந்துவிட்டார். பேருந்து இடிக்கப்போகும் தருணத்தில் எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த நடத்துநர், சைக்கிள்காரன் நிற்காமல் வர்றான் என சத்தம் போட்டார்.
உடனே, நான் எதிர் திசை ரோட்டைப் பார்த்தேன். அப்போது வண்டி எதுவும் வரவில்லை. சைக்கிள்காரர் வண்டியில் வந்து விழுந்துவிடுவார் என்பதை உணர்ந்து, உடனடியாக எதிர் திசை சாலையில் புகுந்து சென்று வண்டியை நிறுத்திவிட்டேன். பேருந்தில் மோதி உயிரிழக்க இருந்தவரை காப்பாற்றி விட்டோம் என மனநிறைவாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
என்ன நடக்கும்னே யோசிக்கல: இச்சம்பவம் குறித்துப் பேசியுள்ள நடத்துநர் சீனிவாசன், "அன்றைக்கு பஸ்ஸில் கூட்டம் குறைவாக இருந்ததால் நான் முன்னால் வந்து அமர்ந்திருந்தேன். அப்போது சைக்கிளில் பெரியவர் வெள்ளைக் கோட்டை தாண்டி வந்ததைப் பார்த்ததுமே அதிர்ச்சியில் ஒரு சத்தம் தான் போட்டேன். அதன் பிறகு என்ன நடக்கும் என்றெல்லாம் யோசிக்கவே முடியவில்லை. வண்டியை எதிர்திசையில் ஒடித்து நிறுத்திய பிறகு தான் சகஜ நிலைக்கு வந்தேன்.
பிறகு, பேருந்தில் இருந்தவர்கள் இறங்கி, கவனிக்காமல் குறுக்கே வந்த அந்த பெரியவரை அடிக்கப் போனார்கள். அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை, அவரை அடிக்கப் போனவர்களைத் தடுத்து நிறுத்தினோம். இனி விழுப்புரம் வரை கவனமாக வண்டி ஓட்ட வேண்டும். பதற்றத்தோடு ஓட்டக்கூடாது என டிரைவரிடம் கூறினேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ரியாக்ஷன் டைம்: இந்நிகழ்வு தொடர்பாக போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பேசுகையில், "ரியாக்ஷன் டைம் என்பது ஒவ்வொரு ஓட்டுநருக்கும் மிக முக்கியமான விஷயம். கடினமான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். அவர்களை நம்பித்தான் பயணிகள் இருக்கிறார்கள். ஓட்டுநர்கள், நடத்துநர்கள் எந்தவித கவனச் சிதறலும் இன்றி பணியாற்ற வேண்டும்.
அதை இவர்கள் மிகச் சிறப்பாக செய்துள்ளனர். ஓட்டுநருக்கு நடத்துனர் உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதையும் இச்சம்பவம் உணர்த்துகிறது. கண்டக்டர் அலர்ட் செய்தது இதில் முக்கியமான விஷயம். உயிரைக் காப்பாற்றியது எங்களுக்குப் பெருமை, இவர்களைப் போலவே போக்குவரத்துத் துறையில் அனைத்து டிரைவர்களும், கண்டக்டர்களும் பணிபுரிய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications