பிரபல தனியார் கல்லூரியில் ஐ.டி ரெய்டு.. நிர்வாகி வீட்டிலும் சோதனை.. பரபரத்த நாமக்கல்!
நாமக்கல்: நாமக்கல் அருகே வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பிரபல தனியார் கல்லூரியில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இளையம்பாளையம் பகுதியில் விவேகானந்தா கல்விக் குழுமம் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி என 18க்கும் மேற்பட்ட கல்லூரிகள் அந்த வளாகத்தில் இயங்கி வருகின்றன.

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலின் போது நாமக்கல் லோக்சபா தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்த கல்லூரி வளாகத்தில் தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த கல்லூரிக் குழுமத்தின் தலைவராக கருணாநிதி என்பவர் உள்ளார். இவர் மக்களவை முன்னாள் துணை சபாநாயகரான அதிமுக எம்.பி தம்பிதுரையின் நெருங்கிய உறவினர் ஆவார்.
இந்த நிலையில், இன்று 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் 20க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் நாமக்கல் வருகை தந்தனர். விவேகானந்தா கல்விக் குழுமத்திற்கு சொந்தமான 18 கல்லூரிகளின் வளாகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஐ.டி அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வருமான வரித்துறை சோதனையால் அந்தக் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும், குமாரமங்கலத்தில் உள்ள கல்லூரியின் தாளாளர் கருணாநிதியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications