'அரிசன் காலனி' எனும் முகவரியில் பள்ளி.. கறுப்பு மை எடுத்து சம்பவம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
நாமக்கல்: அரசுப் பள்ளி 'அரிசன் காலனி' என்ற ஊர்ப்பெயரில் இயங்கி வந்த நிலையில், அப்பெயரை கறுப்பு மை கொண்டு அழித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சம்பவம் செய்திருக்கிறார். இப்பெயரை மாற்ற வேண்டும் என்று ஊர் மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த நிலையில், அமைச்சரின் நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
பெயருக்கு பின்னால் சாதியை சேர்த்துக்கொள்ளும் பழக்கம் தமிழ்நாட்டில் கைவிடப்பட்டு நீண்ட காலமாகிறது. விதி விலக்காக இன்றும் அப்படியான சில பெயர்கள் இருந்தாலும் கூட, அப்பெயரை சாதியுடன் சேர்த்து முழுமையாக சொல்லாமல் பலரும் தவிர்த்து வருகின்றனர். இவை அனைத்தும் திராவிட கட்சிகள் விதைத்த முற்போக்கு சிந்தனைதான் காரணம் என்றால் அது மிகையில்லை. இப்படி இருக்கையில், பட்டியலின மக்களை குறிப்பிடும் வகையில் பயன்படுத்தப்பட்டு வந்த 'அரிசன்' எனும் வார்த்தையில் பள்ளி ஒன்று இயங்கி வருந்திருக்கிறது. இப்பெயரை தவிர்க்க வேண்டும் என்கிற கிராம மக்களின் கோரிக்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் நிறேவேற்றியிருக்கிறார்.

அதாவது நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று 'அரிசன் காலனி' என்ற ஊர்ப்பெயரில் இயங்கி வந்தது. இதனை மாற்ற வேண்டும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இன்று அப்பளிக்கு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ், கறுப்பு மை கொண்டு 'அரிசன் காலனி' என்கிற பெயரை அழித்துள்ளார். மட்டுமல்லாது மல்லசமுத்திரம் கிழக்கு என்றும் பள்ளியின் முகவரியை மாற்றியுள்ளார்.
இது குறித்து தனது x பக்கத்தில், "நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி' எனும் பெயரினை 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவ்வூர் மக்களின் கோரிக்கையாக இருந்தது.
'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க வெளியிட்டோம். தொடர்ந்து இன்று மல்லசமுத்திரம் கிராமத்திற்கு நேரடியாக சென்று 'அரிசன் காலனி' எனும் பெயரினை அழித்து, அரசாணையை பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினோம்.
இதற்காக போராடி வந்த ஊர் பெரியர் கணேசனுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தோம். ஊர் மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் G.அன்பழகனிடம் 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அலைப்பேசி வாயிலாக தெரிவித்தோம். மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். 'கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்' - மு.க" என்று அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
அமைச்சரின் இந்த செயல் பெரும் வரைவேற்பை பெற்றிருக்கிறது. இது தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் பலரும் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications