மனைவி கீதாவை.. நாமக்கல் இந்து முன்னணி மாவட்ட செயலாளரே படுகொலை செய்தது அம்பலம்.. திடுக் தகவல்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெகதீசனின் மனைவி கீதா நேற்று முன் தினம் இரவு கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டதாக கணவர் ஜெகதீசன் கூறியிருந்தார். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் குடும்பத் தகராறில் கட்டிய மனைவியை கணவர் ஜெகதீசனே கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் மேட்டு தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ஜெகதீசன் (வயது 40). இவரது மனைவி கீதா (36). இவர்களுக்கு ரியாஷீ (10), ஓவியா (6) என்ற இரு மகள்கள் உள்ளனர். ஜெகதீசன் கடந்த 7 ஆண்டுகளாக இந்து முன்னணி நாமக்கல் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது வீட்டின் முன்பகுதியில் தான் இந்து முன்னணி அலுவலகம் உள்ளது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், மகள்கள் இருவரும் விருந்துக்கு சென்றுவிட்டனர். வீட்டில் ஜெகதீசனும் மனைவி கீதாவும் தான் இருந்துள்ளனர். நேற்று முன் தினம் இரவு இருவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். இந்த நிலையில் நள்ளிரவில் யாரோ வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டதும் கதவை திறந்து பார்த்த கீதாவை மர்ம நபர்கள் இரண்டு பேர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
கீதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இந்த தாக்குதலில் ஜெகதீசனுக்கும் இரண்டு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. உடனே ஜெகதீசன் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதையடுத்து மர்ம நபர்கள் இருவரும் தப்பி சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே கீதாவின் பெற்றோர் என் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், ஜெகதீசன் தான் கொலை செய்திருப்பதாகவும் அவர் போலீசில் புகார் கூறினார்.
மேலும் கீதாவை கழுத்தை அறுத்து கொலை செய்யும் அளவுக்கு அவருக்கு எதிரி இல்லை என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெகதீசனிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரனையில் ஜெகதீசன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டதாக அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெகதீசனை போலீசார் கைது செய்தனர். இந்து முன்னணி மாவட்ட செயலாளரே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications