நாமக்கல் மல்லிகா.. குறுகுறுன்னு பார்த்த பக்கத்து வீட்டு பெண்கள்.. பின்னாலயே வந்த 2 இளைஞர்கள்.. ஓஹோ
நாமக்கல்: நாமக்கல்லில் பொதுமக்களிடம் சிக்கி கொண்ட 2 திருடர்களுக்கும், 2 பெண்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.. இதுகுறித்த விசாரணையும் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. யார் இந்த 4 பேர்? மல்லிகாவுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு?
அண்டை வீட்டில் வசித்து வரும் பெண்ணின் பணப்புழக்கத்தை நோட்டமிட்டு, அடிவயிற்று எரிச்சலில் அதனை திருடி அபகரிக்கலாம் என நினைத்தால் எந்த மாதிரியான பின்விளைவு வந்து சேரும் என்பதற்கு, இந்த சம்பவம் ஓர் உதாரணமாக அமைந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது பள்ளிபாளையம் என்ற பகுதி.. இங்குள்ள அன்னை சத்தியா நகர் பகுதியில், வீட்டுவசதி அடுக்குமாடி குடியிருப்பில் மல்லிகா என்ற பெண் வசித்து வருகிறார்..
சம்பவத்தன்று இவரது வீட்டுக்குள் 2 இளைஞர்கள் திடுதிப்பென்று நுழைந்து, மல்லிகாவின் கழுத்தில் கிடந்த 14 சவரன் நகை மற்றும் ரூ.37 ஆயிரம் ரொக்கத்தை பறித்து சென்றனர்.. அத்துடன், மல்லிகா மீது கொதிக்கும் தண்ணீரையும் கொட்டினார்கள்.
2 இளைஞர்கள்: வெந்நீர் உடலில் கொட்டியதுமே, மல்லிகா அலறி துடித்தார்.. இந்த சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அந்த 2 இளைஞர்களை மடக்கி பிடித்துவிட்டனர்.. இருவரையும் அங்கேய சரமாரியாக தாக்கி, பிறகு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.. இதையடுத்து போலீசார், 2 நபர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், மல்லிகாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 2 பெண்களுடன், இந்த 2 இளைஞர்களுக்கும் ஏற்கனவே தொடர்பு உள்ளது தெரியவந்தது.
அதாவது மல்லிகாவுக்கு திருமணமாகிவிட்டது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.. எனினும், மல்லிகா எப்போதுமே கழுத்து நிறைய நகைகளை அணிந்திருப்பாராம்.. கொள்ளையர்கள் பறித்த 14 சவரன் நகையானது, மல்லிகாவின் கழுத்தில் எப்போதுமே இருக்குமாம்.. இதைத்தவிர, நிறைய பணத்துடன், ஆடம்பரமாகவும், செழிப்புடனும் இருந்திருக்கிறார்..
தனிநபர்: பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஐஸ்வர்யா, மணிமேகலை என்ற இரண்டு பெண்களுக்கும், மல்லிகா மீது ஒருகண் இருந்து வந்துள்ளது.. அத்துடன், தனியாக வசிக்கும் மல்லிகாவுக்கு, இவ்வளவு நகைகளா? எரிச்சலடைந்து பொறாமைப்பட்டுள்ளனர். அதனால், மல்லிகாவிடம் கொள்ளையடித்துவிடலாம் என்றும் ஐஸ்வர்யா, மணிமேகலை இருவருமே திட்டம் போட்டார்கள்.
இதற்காக, தங்களுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகமான, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த அப்துல், சாந்த குமார் ஆகியோரை தொடர்பு கொண்டு, பள்ளிபாளையம் வர சொன்னார்கள்.. அந்த 2 இளைஞர்களிடம், மல்லிகாவின் கழுத்தில் உள்ள நகையையும், பணத்தையும் கொள்ளையடித்து வரும்படி கூறி, திட்டம் வகுத்து தந்துள்ளனர்.
வெந்நீர்: அதன்படியே இளைஞர்களும், மல்லிகாவின் நகை, பணத்தை அபகரித்துவிட்டனர். ஆனால், சுடுநீரை ஊற்றவும்தான், மல்லிகா கத்தி கூச்சலிட்டுள்ளார்.. இதில்தான் கொள்ளையர்களும், இவர்களுக்கு ஐடியா தந்த பொறாமை பெண்களும் சிக்கி உள்ளனர். அபகரிக்கப்பட்ட 14 சவரன் நகை, ரூ.37 ஆயிரத்தை, 2 இளைஞர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.. இப்போது மொத்தம் 4 பேருமே ஜெயிலில் உள்ளார்கள்.
ஐஸ்வர்யா, மணிமேகலை இருவருமே, "மல்லிகாவிடம் நகை, பணம் உள்ளது. மதிய நேரத்தில் வீட்டில் தனியாக தான் இருப்பார். அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தால் நகை, பணத்தை பறிக்கலாம்" என்று இன்ஸ்டா இளைஞர்களுக்கு ஐடியாக்களை தந்திருக்கிறார்கள்.
தங்க செயின்: அதன்படிதான் இளைஞர்களும் மல்லிகா வீட்டிற்குள் புகுந்து, அவரது கழுத்திலிருந்த தங்க செயினை பறிக்க முயன்றுள்ளனர்.. ஆனால், அவ்வளவு கனம் நிறைந்த செயினை பறிக்க முடியாததால், மல்லிகாவை சரமாரியாக தாக்கிவிட்டு, கிச்சனுக்கு சென்று, அடுப்பில் வைத்திருந்த சுடு தண்ணீரை கொண்டுவந்து அவர் மீது ஊற்றியிருக்கிறார்கள்.. அதன்பிறகே கழுத்திலிருந்த தங்க செயினை பறித்துள்ளனர்.
மல்லிகா அலறியதுமே, அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர். ஆனால், அதற்குள் 2 இளைஞர்களும் 2 கி.மீ. தூரத்துக்கு தப்பி ஓடியிருக்கிறார்கள்.. ஆனால் பொதுமக்கள் விடவில்லை.. அவரும் பின்னாடியே துரத்தி துரத்தி சென்று, காட்டூர் பகுதியில் இரண்டு பேரையும் பிடித்துவிட்டனர்..
தீவிர சிகிச்சை: கயிற்றால் அவர்களை கட்டி சரமாரியாக தாக்கிவிட்டு, அதற்கு பிறகே பள்ளிப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். சுடுதண்ணீர் ஊற்றியதால் படுகாயமடைந்த மல்லிகா, பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறாராம்.












Click it and Unblock the Notifications