ஈரோடு, பல்லடம் கறிக்கடைக்காரர்கள் பயங்கர குஷி..நாமக்கல் "கறிக்கோழி"யால் செம மகிழ்ச்சி..மலைத்த மக்கள்
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் 10 நாட்களில் கறிக்கோழி விலை எவ்வளவு தெரியுமா? விலையை கேள்விப்பட்டு அசைவப்பிரியர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை பண்டிகை காலங்களில் அசைவ உணவுகளை மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.. மாட்டுப்பொங்கல் தினத்தன்று மட்டன், சிக்கன், மீன் என அசைவ உணவுகளை மக்கள் சமைத்து, தங்கள் உற்றார், உறவினருடன் சேர்ந்து உண்பது வழக்கமான ஒன்றாகும்.

ஆடுகள் விற்பனை: அதேபோல தீபாவளி நேரத்தில் அசைவம் இல்லாத விருந்து கிடையாது.. அதனால்தான், பண்டிகை நாட்களில் தமிழகத்தின் பிரதான சந்தைகளில் ஆடுகள் விற்பனையும் களைகட்ட துவங்கிவிடும்.
இந்த முறை பொங்கல் பண்டிகைக்கும் தமிழகத்தின் சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது.. இத்தனைக்கும் அந்த நேரத்தில் பஸ் ஸ்டிரைக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது, சந்தையில் எதிர்பார்த்த கூட்டம் இருக்காது என்றே நினைத்தார்கள். அதுமட்டுமல்ல, கரிநாள் செவ்வாய்கிழமையன்று வந்தது.. தை பூசமும் அடுத்தடுத்து வரவிருந்ததால், சிலர் அசைவம் உண்ணுவதை தவிர்ப்பார்கள் என்பதால், கறி விற்பனையும் மந்தமாகும் என கணக்கிடப்பட்டது.
இறைச்சி வியாபாரம்: ஆனால், இறைச்சி வியாபாரம் அமோகமாகவே நடந்ததாக கறிக்கடைக்காரர்கள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள். ஆடு மட்டுமல்லாமல் கோழிக்கறியும் கடைகளில் சிறப்பாகவே விற்பனையாகியிருக்கிறது..
கோழிக்கறியை பொறுத்தவரை, பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம், தினமும் 40 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது.. இந்த கறிக்கோழிதான், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.. காணும் பொங்கல் நேரத்தில், ஒரே நாளில் கறிக்கோழி விற்பனை, 80 சதவீதம் உயர்ந்து, 59.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தாக செய்திகள் வெளியாகியிருந்தன.
கறிக்கோழி விலை: அந்தவகையில், பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. உற்பத்தி குறைவு, நுகர்வு அதிகரிக்கும் போது, அதன் விலை உயர்வதும், உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கையாக உள்ளது.
கடந்த 1-ந் தேதி கறிக்கோழி ஒரு கிலோ 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 5-ந் தேதி 92 ரூபாய், 10-ந் தேதி 82 ரூபாய், 15-ந் தேதி 98 ரூபாய், 20-ந் தேதி 82 ரூபாய், 25-ந் தேதி 88 ரூபாய் என்று மாறி மாறி விலைகள் தென்பட்டன.
விலை நிர்ணயம்: கடந்த 27-ந் தேதி 98 ரூபாய், நேற்றைய தினம் 107 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த 20-ந் தேதி 82 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை நேற்று 107 ரூபாயாக உயர்ந்ததால் 10 நாட்களில் கொள்முதல் விலை 25 ரூபாய் அதிகரித்திருக்கிறது..
இந்த விலை உயர்வு குறித்து, முட்டைக் கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் தரப்பில் சொல்லும்போது, பொங்கல், தைப்பூசம் முடிந்துள்ளதால் தமிழகத்தில் நுகர்வு அதிகரித்துள்ளது.. 50 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தியும் சரிந்துள்ளதால், கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.. இனி வரும் நாட்களிலும் கோழிக்கறி விலை உயர வாய்ப்புள்ளது" என்கிறார்கள். இந்த விலையை கேள்விப்பட்டு அசைவ பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications