முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை.. நாமக்கல் அருகே அதிர்ச்சி!
நாமக்கல்: மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாமக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி மேட்டுத் தெருவை சேர்ந்தவர் சுதா (48 வயது). இவரது மகன் பிரபாகரன் (25 வயது), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. பிரபாகரனின் தந்தை செல்வராஜ் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த பிரபாகரன், திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த சுதா, தனது மகன் பிரபாகரன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
இதற்கிடையே தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது இறந்த பிரபாகரனின் சட்டை பையில் ஒரு கடிதம் இருந்தது தெரியவந்தது.
அந்தக் கடிதத்தில், "நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் சட்ட விரோதமாக நடக்கும் மது விற்பனையால் இளைஞர்கள், சிறுவர்கள் மதுப் பழக்கத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இவர்களை உடனடியாக கைது செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். இதற்கு ஒரு நீதி வேண்டும் முதலமைச்சர் விஜய் அண்ணா" என்று எழுதப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தை சேந்தமங்கலம் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். பின்னர் பிரபாகரன் உடல் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரன் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications