ஷவர்மா ஷாக் அடங்குவதற்கு முன்பாக அடுத்த சம்பவம்.. பர்கர் சாப்பிட்டு 8 பேர் அட்மிட்.. நாமக்கல்லில்
நாமக்கல்: ஷவர்மா சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் பாதிப்பு மறையும் முன்பாக நாமக்கல் சேலம் சாலையில் பர்கர் சாப்பிட்டவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவக உரிமையாளர்கள் மனசாட்சியோடு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இன்றைய இளைஞர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவாக மாறி வருகிறது ஷவர்மா, பர்கர், சிக்கன் ரைஸ், நூடுல்ஸ். ஹோட்டல்களில் உணவுகளை ஆர்டர் செய்யும் போதே இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகளை தவிர்த்து பரோட்டா தொடங்கி ஷவர்மா உள்ளிட்ட உணவுகளைத்தான் கண்கள் தேடுகின்றன.

இரவு நேர பணிகளை செய்யும் ஐடி நிறுவன ஊழியர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை ஷவர்மா, பர்கர் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட ஆரம்பித்து விட்டனர். உணவு மருந்தாக இருந்த நிலையில் தற்போது உணவு விஷமாகி வருகிறது.
தமிழகத்திலும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் உணவாக ஷவர்மா இருக்கிறது. மாநில தலைநகரான சென்னையில் பலர் விரும்பி சாப்பிடும் உணவாக ஷவர்மா உள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது பள்ளி மாணவி உடல் நஅவர் உணவு விஷமாகியதின் காரணமாக இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல கடைகளில் இருந்து பழைய உணவு பொருட்களை சுகாதாரத்துறையினர் கைப்பற்றினர்.
கெட்டுப்போன இறைச்சியில் இருந்த உணவுகள் விஷமாகி விடுகின்றன. விஷமாகும் உணவுகள் குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகமாக பாதிக்கின்றன. நாமக்கல் பரமத்தி சாலையில் சில தினங்களுக்கு கெட்டுப்போன இறைச்சியால் செய்யப்பட்ட ஷவர்மாவை சாப்பிட்டு ஒரு சிறுமி உயிரிழந்த நிலையில் 43 பேர் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து ஷவர்மா விற்பனை செய்த கடைக்கு ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர். கடை உரிமையாளர், சமையல் செய்தவர், கோழிக்கடைக்காரர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் உணவகங்கள், ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் நடத்திய அதிரடி சோதனையில் கிலோ கணக்கில் கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில் நாமக்கல் நகரத்தில் மற்றுமொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட ஒரு சிறுமி உயிர் இழந்த விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள மிஸ்டர் பர்கர் என்ற உண்வகத்தில் பர்கர் சாப்பிட்ட சஞ்சய்,18 என்ற இளைஞருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த கடையில் பர்க்கர் சாப்பிட்ட 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 7 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினர். சஞ்சய் மட்டும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த கடையில் இன்று காலை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடைகளில் இருந்த தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஷவர்மா, பர்கர் போன்ற உணவுகள் புதிதாக இருந்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பழைய சிக்கன், கெட்டுப்போன சிக்கனில் செய்த எந்த உணவாக இருந்தாலும் அது விஷமாகத்தான் மாறி விடும் எனவே ஹோட்டல்களில் சாப்பிடும் போது தரமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் காசு வாங்கிக் கொண்டு உணவுகளை விற்பனை செய்யும் ஹோட்டல் கடைக்காரர்களும் மனசாட்சியோடு தரமான உணவுப்பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications